இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தைச் சீரமைக்க வேண்டும்: விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை
Published: Nov 16, 2023, 3:36 PM


இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தைச் சீரமைக்க வேண்டும்: விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை
Published: Nov 16, 2023, 3:36 PM

Rettamalai Srinivasan Mani Mandapam: இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளம் என்ற பகுதியில் பிறந்தவர், தாத்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசன். பட்டியல் இன மக்களின் மேன்மைக்காகப் பல வழிகளில் பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன். இதனால் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக உள்ளார்.
இவருக்கு இவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வந்ததை ஏற்றுக் கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்குச் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அண்ணா நகர்ப் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து, அதற்காக ரூ.1.50 கோடி நிதியையும் ஒதுக்கியது. அண்ணா நகர்ப் பகுதியில் இதற்காக ஒரு ஏக்கர் அரசு நிலமும் ஒதுக்கப்பட்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
மணிமண்டபம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அது பொதுமக்களின் பார்வைக்கு இன்னும் திறந்து விடப்படாமல் உள்ளது. மேலும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இது திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சுவர், வரவேற்பு வளைவு, என எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும் இந்த மணிமண்டபத்தை பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை அரசு உடனடியாக பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைத்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மணிமண்டபத்தைப் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மணிமண்டபம் குறித்து தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளேன். மணிமண்டபத்தைக் கட்டி முடித்த பொதுப்பணித்துறை அதனை தற்போது வரை செய்தி விளம்பரத் துறை வசம் ஒப்படைக்காமல் உள்ளது. இது குறித்தும் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் நினைவூட்டி உள்ளேன்.
மேலும், இந்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு தற்போது 82 லட்சம் ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கி மணிமண்டபத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பவும் வரவேற்பு வளைவு அமைக்கவும் ஆணையிட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதால் இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்குப் பிறகு இதற்கான பணிகள் உடனே துவக்கப்படும்" என்று எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
