ETV Bharat / state

நீட் தேர்வு ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. அனிதாவின் சொந்த மண்ணில் மனம் திறந்தார்..

author img

By

Published : Mar 14, 2023, 5:19 PM IST

Minister
Minister

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை தொடர்வதே, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று(மார்ச்.14) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் விழா நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சேவைகளை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் மருத்துவ அங்கிகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு 13.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படுவதால், இங்கு மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், நீட் எதிர்ப்பு குறித்தும் தெரிந்து கொள்வார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை தொடர்வதே, நீட்டை ரத்து செய்வதற்கான ரகசியம். நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை, நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தேன்" என்று கூறினார்.

பிறகு சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அமைச்சர் சிவசங்கர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விழா ஏற்பாடுகளை முன்னின்று சிறப்பான முறையில் செய்தனர்.

அரியலூர் மாநகரின் பல்வேறு இடங்களில் திமுக கொடியுடன் வளைவு அமைத்தும், செண்டை மேளம், தாரை தப்பட்டை இசைத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூரில் மருத்துவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: வெள்ள அபாய குறைப்பு குறித்த திருப்புகழ் குழு இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.