பொன்னி நதி பாக்கணுமே... மதிப்புமிகு பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற கல்லணை, வீராணம் ஏரி!

author img

By

Published : Mar 16, 2023, 10:31 PM IST

Etv Bharat
Etv Bharat ()

மத்திய அரசின் water Heritage sites என்ற பட்டியலில் தமிழ்நாட்டில் ஏழு இடங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கல்லணை, வீராணம் ஏரி, மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் ஆகியவையும் அடங்கும்.

அரியலூர்: நாடு முழுவதும் உள்ள தொன்மையான பாரம்பரியமிக்க, கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற, பல்வேறு வகையான கட்டடங்கள், கோயில்கள், பாலைவனங்கள், நீர் வீழ்ச்சிகள், சரணாலயங்கள், அதிசயப் பொருட்கள் போன்றவற்றை இந்திய தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து, அதன் பழமைக்கு ஏற்ப, அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது வழக்கம்.

மேலும் பாரம்பரிய சின்ன பட்டியலுக்காக யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு அனுப்புவதும் வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் ஏற்கனவே 40 இடங்கள் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இவற்றில் 38 இடங்கள் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரிய சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

ஏற்கனவே, இந்த பாரம்பரிய பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாபலிபுரம் கடற்கரை கோயில், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், ஊட்டி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சரணாலயங்கள், போன்ற பல்வேறு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட பல்வேறு நினைவுச் சின்னங்கள், கோயில்கள், மன்னர்கள் ஆட்சி புரிந்த இடங்கள், பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் நீர் நிலைகள் குறித்த பாரம்பரிய ஆய்வுகளை தொல்பொருள் துறை சமீபத்தில் மேற்கொண்டது. இதுகுறித்து தொல்பொருள் துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.

அந்த கடிதத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் பாரம்பரிய சின்னப் பட்டியலுக்கு அனுப்பும் வகையில் தகுதி பெற்ற நீர் ஆதாரங்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்து மொத்தம் 421 நீர் ஆதாரங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்தந்த மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரப்பெற்றது. இந்த பரிந்துரை கடிதங்களைப் பெற்ற மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் எல்லா மாநிலங்களிலும் அதிரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் மொத்தம் 75 நீர் ஆதாரங்கள் water Heritage sites என்ற மதிப்புமிகு பட்டியலுக்கு தேர்வாகி உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு இடங்கள் இடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி பாரம்பரிய சின்னங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்கள் வருமாறு:

வரிசை எண் :57

தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழணை எனப்படும் லோயர் அணைக்கட்டு

வரிசை எண் :58

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்

வரிசை எண் : 59

பக்கிங்ஹாம் கால்வாய், சென்னை

வரிசை எண் :60

திருச்சி தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ள, கல்லணை

வரிசை எண் :61

நொய்யல் நதி, கோவை

வரிசை எண் :62

கடலூர் மாவட்டம், வீராணம் பெரிய ஏரி

வரிசை எண் :63

காளிங்கராயன் அணை, ஈரோடு.

இடங்கள் குறித்த அறிமுகம்:

லோயர் அணைக்கட்டு எனப்படும் கீழணை: இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கீழனை எனப்படும் லோயர் அணைக்கட்டு என்ற அணையானது தஞ்சாவூர் மாவட்டம் - அரியலூர் மாவட்ட எல்லைகளை பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அணைக்கரை என்ற ஊரில் இந்த லோயர் அணைக்கட்டு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1902ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேய பொறியாளரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த அணையானது அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது. அணையில் மதகுகள், ஷட்டர்கள், பொருத்தப்பட்டு 9 அடி தண்ணீர் தேக்கும் விதம் இந்த அணைக்கட்டு ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டது.

இந்த அணையின் மேல் பகுதியில் ஆங்கிலேயர் கால குதிரை சாரட்டு வண்டிகள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் இந்தப் பாதையே தார் சாலையாக மாறி சென்னையில் இருந்து கும்பகோணம் செல்வதற்கான முக்கிய பாலமாக இந்த அணைக்கரை பாலம் அமைந்துவிட்டது.

இந்த கீழணையின் மேல் பகுதியில் உள்ள அணைக்கரை பாலம் ஆனது பொது போக்குவரத்துக்கு தகுதியற்றது என்று 2002ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது என்ற போதும், அவ்வப்போது சிறுசிறு பழுதுகள் நீக்கப்பட்டு, இது நாள் வரை அதில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு கொண்டே தான் வருகிறது.

இந்த கீழணையில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மிக முக்கியமாக சென்னை மாநகர மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வீராணம் ஏரிக்கு இந்த கீழணையில் இருந்து தான் தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லணை: திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட எல்லைகளை இணைக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் எழில்மிகு தோற்றத்தோடு அமைந்துள்ளது, கல்லணை. மாமன்னன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்து கம்பீரமாக நிற்கும் கல்லணை இந்த பாரம்பரிய பட்டியலில் சேர்ந்துள்ளது.

கல்லணையில் அமைக்கப்பட்டுள்ள அணையின் பாரம்பரியம் அணையின் கட்டுமானம் அணையில் இருந்து தண்ணீர் பிரிக்கும் விதங்கள் குறித்து இன்றளவும் எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி சர்வதேச பொறியாளர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் உள்ளது.

வீராணம் பெரிய ஏரி: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, வீராணம் பெரிய ஏரி. விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி - அரியலூர் உள்ளிட்டப் பல்வேறு மாவட்ட விவசாயிகள் இந்த வீராணம் பெரிய ஏரியிலிருந்து பாசன வசதி பெறுகின்றனர். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம், கீழணை எனப்படும் லோயர் அணைக்கட்டு வடபார் தலைப்பு என்ற இடத்திலிருந்து வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் நீர் வந்து சேர்கிறது.

இந்த வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலமாக சென்னைக்கு கொள்ளிடம் நீர் எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பம்பிங் ஸ்டேஷன் வழியாக சென்னை மாநகர் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வீராணம் ஏரி தற்போது பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமையான விஷயம் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதையும் படிங்க: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்திச் சேனல் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.