ETV Bharat / state

37 ஆயிரம் ரூபாய் போனுக்கு நான்கரை லட்சம் இழப்பீடா..! குட்டு வைத்த கோர்ட்..

author img

By

Published : Feb 9, 2023, 8:45 PM IST

court dismissed the petition of the person sought four and a half lakhs compensation for 37 thousand rupees phone
37 ஆயிரம் ரூபாய்க்கு நான்கரை லட்சம் இழப்பீடா..! குட்டு வைத்த கோர்ட்..

ரூபாய் 37 ஆயிரம் மதிப்புள்ள செல்போனுக்காக ரூபாய் நான்கரை லட்சம் இழப்பீடு கோரிய மனுதாரருக்கு அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் குட்டு வைத்தது.

அரியலூர்: சென்னை தியாகராய நகர், டாக்டர் தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், சுப்புரங்கா பாரதி. இவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்து இருந்ததாவது, ’கடந்த 09.03.2014அன்று சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும் டாட்டா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் ஹெச்டிசி இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான எச்டிசி ஒன் என்ற மாடல் செல்போனை ரூபாய் 37,057 செலுத்தி வாங்கினேன்.

அந்த செல்போனை அந்த நிறுவன ஊழியர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர். ஒரு வருட கேரண்டி உள்ளது என்று கேரண்டி கார்டு கொடுத்தனர். ஆனால், அவர்கள் செயல் விளக்கம் அளித்தது போல செல்போன் சரியாக இயங்கவில்லை. எதிர் முனையில் பேசுபவரின் குரல் துல்லியமாக கேட்கவில்லை. செல்போன் தானாகவே சுவிட்ச் ஆஃப் ஆனது. இதுகுறித்து செல்போன் வாங்கிய நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தங்களது அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையத்தை நாடுமாறு தெரிவித்தனர்.

அங்கு சென்று காட்டிய போது கோளாறு சரி செய்யப்பட்டது. ஆனால், சில நாட்களில் அதே கோளாறு திரும்பவும் ஏற்பட்டது. பலமுறை பழுதாவதும் திரும்ப சர்வீஸ் செய்வதும் தொடர்கதையாக மாறியது. எனவே எனக்கு புதிய செல்போன் தர வேண்டும் அல்லது செல்போனுக்காக நான் செலுத்திய ரூபாய் 37,057 திருப்பித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். தயாரிப்பு நிறுவனம், செல்போன் வாங்கிய நிறுவனம், சர்வீஸ் மையம் போன்ற இடங்களுக்கு புகார்கள் தெரிவித்து எவ்விதப் பலனும் இல்லை.

கடந்த 25.11.2016 அன்று சட்டரீதியாக நோட்டீஸ் அளித்தேன். அப்போதும் மேற்படி நிர்வாகத்தார் செல்போன் தொடர்பாக எவ்வித முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூபாய் நான்கரை லட்சத்தை இழப்பீடாக மேற்படி நிறுவனத்தார் வழங்க வேண்டும். செல்போனுக்கு நான் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும். வழக்கு செலவுக்காக ரூபாய் 10 ஆயிரம் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கானது சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 09.03.14 அன்று வாங்கப்பட்ட செல்போனுக்கு வாரண்டி காலம் ஒரு வருடம் என்று செல்போன் வாங்கும் போதே தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், வாரண்டி காலம் முடிந்த பிறகும் மனுதாரர் உரிமைகளை கோரியுள்ளார். தவிர, செல்போன் தயாரிப்பு நிறுவனம் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. தனது ரீடைல் விற்பனையாளர்கள் மூலமே விற்பனை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மனுதாரர் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அதேபோல செல்போனில் ஏற்பட்ட பழுது தொடர்பான ஆவணங்கள், சரி செய்த ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

இதுபோன்ற ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்காத காரணத்தால் மனுதாரர் கோரிய அனைத்து இழப்பீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. செல்போன் நிறுவனம் அதனை விற்ற ரீடைல் நிறுவனம், சர்வீஸ் நிறுவனம் உள்ளிட்ட யாரும் எந்தத் தொகையையும் மனுதாரருக்கு வழங்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பளித்து மேற்படி மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வேட்பாளர் நின்ற விவகாரம் - தேர்தல் அலுவலர்கள் டிஸ்மிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.