ETV Bharat / sports

WTCFinal 2023: ஆஸ்திரேலியா ஆக்ரோஷ பந்துவீச்சு; ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!

author img

By

Published : Jun 8, 2023, 10:43 PM IST

Etv Bharat
Etv Bharat

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாலோ ஆன் ஆகாமல் தவிர்க்க போராடி வருகிறது.

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவிக்கும் இரண்டு அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரியுடன் துவக்கினார். மேலும் ஷமி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து மண்ணில் தனது 7வது சதத்தை அடித்தார்.

மேலும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் (31) மூன்றாவது இடம் பிடித்தார். சிராஜ் வீசிய ஓவரில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களுக்கு அவுட்டாக இந்திய அணி ஸ்மித், ஹெட் பார்ட்னர்ஷிப்பை ஒரு வழியாக தகர்த்தது. பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். இந்நிலையில் ஷமி வீசிய பந்தில் கிரீன் முதல் ஸ்லிப்பில் கில்லிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி பொறுமையாக ஆடினார். சதமடித்த பின் சற்று அதிரடி காட்டிய ஸ்மித் 121 ரன்களுக்கு தாக்கூர் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்டார்க், அக்சர் பட்டேலின் அருமையான த்ரோவில் ரன் அவுட்டானார். பின்னர் ஜடேஜா பந்தில் சிக்ஸர் அடித்து அதிரடி காட்டிய அலெக்ஸ் கேரி அவரது பந்திலேயே 48 ரன்களுக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ், லியான் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 469 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோரது பந்துவீச்சில் அனல் பறந்தது.

கம்மின்ஸ் ஓவரில் பவுண்டரி அடித்த இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 15 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். அடுத்ததாக சுப்மன் கில், போலண்ட் இன்சுவிங் பந்தில் 13 ரன்களுக்கு போல்டானார். இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் களமிறங்கிய கோலி, புஜாரா ஜோடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புஜாரா (14) கில் அவுட்டான அதே முறையான பந்தில் கீரின் வீசிய பந்தில் அவுட்டானார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கோலிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஸ்டார்க் பந்தில் கோலி (14) மீண்டும் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஹானே, ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று பொறுமையாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஜடேஜா 48 ரன்களுக்கு லியான் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக விக்கெட் கீப்பர் பரத் களம் இறங்கினார்.

இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பரத் 5 ரன்களுடனும், ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா பந்துவீச்சை விளாசும் ஆஸ்திரேலியா!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.