ETV Bharat / sports

TNPL 2022: திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி - இரண்டு நாள்கள் லீவு...

author img

By

Published : Jun 28, 2022, 7:35 AM IST

TNPL 2022 MATCH 6 RTW vs TT
TNPL 2022 MATCH 6 RTW vs TT

டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடரில் இன்றும், நாளையும் போட்டிகள் கிடையாது. அடுத்த போட்டி வரும் 30ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி: 2022 டிஎன்பிஎல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் ரஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், அனிருதா ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நேற்று (ஜுன் 27) மோதின. திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய திருச்சி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், திருப்பூர் அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது. இதன்மூலம், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி, திருப்பூர் அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. துஷார் ரஹிஜா 42 (26), முகமது 29 (15) ஆகியோர் கடைசி கட்டத்தில் ரன்களை விரைவாக குவித்து வெற்றிக்கு பக்கப்பலமாக இருந்தனர்.

திருச்சி பந்துவீச்சில் சரவண குமார் 3, பொய்யாமொழி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முன்னதாக, திருச்சி அணி பேட்டிங்கில் முரளி விஜய் மட்டும் 16 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் என 34 ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். திருப்பூர் அணி சார்பாக 29 ரன்களையும், 1 விக்கெட்டையும் எடுத்த முகமது ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், திருப்பூர் அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி) 3ஆவது இடத்திலும், திருச்சி அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 தோல்வி) 4ஆவது இடத்திலும் உள்ளன.

டிஎன்பிஎல் தொடரில் இன்றும் (ஜுன் 28) , நாளையும் (ஜுன் 29) போட்டிகள் இல்லை என்பதால், அடுத்தடுத்த போட்டிகள் வரும் ஜூன் 30ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகின்றன. அன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 7ஆவது லீக் போட்டி மாலை 3.15 மணிக்கும், சீசெம் மதுரை பாந்தர்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் 8ஆவது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்கும். திருநெல்வேலியில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் நேற்றுடன் (ஜுன் 27) நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சஞ்சு சாம்ஸனுக்காக போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.