ETV Bharat / sports

DC vs MI: பிளே ஆஃப்பில் பெங்களூரு - டெல்லிக்கு டாடா காட்டியது மும்பை

author img

By

Published : May 22, 2022, 7:29 AM IST

Updated : May 22, 2022, 7:57 AM IST

RCB Qualified into Playoffs
RCB Qualified into Playoffs

டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாழ்வா சாவா போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்த நிலையில், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் முன்னரே தகுதிபெற்றுவிட்டன. நான்காவது இடத்திற்கு பெங்களூரு, டெல்லி அணிகள் இடையே போட்டாப்போட்டி நிலவியது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு (மே 21) நடைபெற்ற மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, பிளே ஆஃப் சுற்றின் நான்காவது அணியை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது.

டெல்லி அணி வென்றால் அதிக ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப்பிற்கு செல்லும் என்றும், மும்பை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி நேரடியாக தகுதிபெற்றுவிடும் என்றும் கணிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. வெற்றிபெற்றே ஆக வேண்டிய இப்போட்டியில், டெல்லி அணி 160 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்தது. ரோவ்மேன் பாவெல் 43, ரிஷப் 39 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இஷான் - பிரீவிஸ்: இதையடுத்து, மும்பை சார்பில் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி களமிறங்க, ரோஹித் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மேலும், அவர் இந்த தொடரில் ஒரு அரைசதத்தைக் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் - பிரீவிஸ் பவுண்டரிகளை குவிக்க தொடங்கியது. 2ஆம் விக்கெட் பாட்னர்ஷிப் 51 ரன்களை எட்டியபோது, இஷான் கிஷன் 48 ரன்களில் குல்தீப்பிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆர்சிபியை காப்பாற்றிய டிம் டேவிட்: பிரீவிஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து அதிரடி வீரர் டிம் டேவிட் களம் கண்டார். ஆட்டம் அப்போது யார் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், டிம் டேவிட் வெறும் 11 பந்துகளில் 34 ரன்களை (4 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டத்தை அப்படியே மும்பை பக்கம் திருப்பிவிட்டு, பெவிலியன் திரும்பினார். இறுதிக்கட்டத்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரமன்தீப் சிங் ஆட்டத்தை முடித்துவைத்தார்.

இதன்மூலம், மும்பை அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், டெல்லி அணியின் பிளே ஆஃப் கனவை பறித்தது மட்டுமின்றி, பெங்களூரு அணியை அடுத்து சுற்றுக்குள் அனுப்பிவைத்துள்ளது. மும்பை பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மும்பை அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் தொடரை நிறைவுசெய்தன.

பழிக்கு பழி எடுத்த பல்தான்ஸ்: இதேபோன்று 2018ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தான் தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடியது. அந்த போட்டியில், மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆப்பிற்கு முன்னேறலாம் என்றிருந்தபோது, டெல்லி அணி 11 ரன்களில் மும்பை வீழ்த்தியது. மேலும், அந்த ஆண்டு லீக் சுற்றோடு மும்பை வெளியேறி, சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது. தற்போது, 2018 சம்பவத்திற்கு தற்போதைய ரோஹித் & கோ டெல்லிக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளது.

பிளே ஆஃப் போட்டிகள்: பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் செவ்வாய்கிழமை (மே 24) நடைபெறுகிறது. தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரும் புதன்கிழமை (மே 25) அன்று மோத உள்ளது. இவ்விரு போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chessable Masters: தவறிழைத்த கார்ல்சன் - ஒரே நகர்வில் சாய்த்த பிரக்ஞானந்தா

Last Updated :May 22, 2022, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.