ETV Bharat / sports

MI vs LSG: லக்னோவை திணறடித்த ஆகாஷ் மத்வால்! மும்பை அணி அபார வெற்றி!

author img

By

Published : May 24, 2023, 8:20 PM IST

Updated : May 25, 2023, 7:04 AM IST

MI vs LSG: அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்
MI vs LSG: அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

16வது ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தகுதிச் சுற்று போட்டிக்குள் நுழைந்துள்ளது.

சென்னை: 16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மே 23இல் நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி 10வது முறையாக ஐபிஎல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இதனையடுத்து நேற்று (மே 24) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 2 பந்தில் இஷான் கிஷன் கொடுத்த கேட்சை குர்ணால் பாண்டியா தவற விட்டார். அதிரடியாக தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா (11) நவீன் உல் ஹக் பந்தில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின்னர் இஷான் கிஷன், யாஷ் தாகூர் வீசிய பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டுடன் 7 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்தது. ஆனால், அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, நவீன் உல் ஹக் வீசிய பந்தில் கௌதமிடம் பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்ததாக கேமரூன் கிரீனும் நவீன் உல் ஹக் வீசிய அற்புதமான இன்ஸ்விங் பந்தில் போல்டாக மும்பை அணி 104 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. பின்னர் களமிறங்கிய திலக் வர்மா ஸ்விப் ஷாட் ஆடி சிக்ஸர் அடித்தார். பின்னர் நவீன் உல் ஹக் பந்திலும் சிக்ஸர் அடித்து அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். மறுமுனையில் பொறுமையாக ஆடிய டிம் டேவிட் 13 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் 26 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய வதேரா, யாஷ் தாகூர் வீசிய 20வது ஓவரை நாலாபக்கமும் பவுண்டரி சிக்ஸர்களாக சிதறடித்தார். ஓவரின் கடைசி பந்தில் வதேரா 23 ரன்னில் அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 183 என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் ஓவரை 2 பவுண்டரியுடன் தொடங்கியது. ஆனால் அதிரடி ஆட்டம் அதிக நேரம் நிலைக்கவில்லை. மன்கட் 3 ரன்களுக்கும், மேயர்ஸ் 18 ரன்களுக்கும் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய ஸ்டொய்னிஸ் கொடுத்த கேட்சை வதேரா தவறவிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடி வந்தார். மறுமுனையில் குர்ணால் பாண்டியா சிக்ஸ் அடிக்க முயன்று சாவ்லா பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய பதோனி, பூரண் ஆகியோர் மத்வால் வீசிய பந்தில் அடுத்தடுத்து அவுட்டாக 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து லக்னோ அணி திணறியது.

தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் அபார பந்து வீச்சில் 16.3வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்த லக்னோ அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், நாளை (மே 26) அகமதாபாத்தில் நடைபெற உள்ள 2வது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.

இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி, வருகிற 28ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோத உள்ளது. இந்த நிலையில், இறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதுவதையே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் என்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

இதையும் படிங்க: CSK vs GT: சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. இறுதிப் போட்டியில் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே

Last Updated :May 25, 2023, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.