ETV Bharat / sports

IPL 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

author img

By

Published : Sep 30, 2021, 7:17 AM IST

IPL 2021
IPL 2021

ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2021 லீக் போட்டியில் நேற்று (செப் 29) விராத் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற விராத் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வினி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்கு அபார தொடக்கத்தை தந்தனர். இருவரும் முதல் விக்கெட் பார்ட்ன்ர்ஷிப்க்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

அபார தொடக்கத்தை வீணடித்த ராஜஸ்தான்

இந்த ஜோடியை டான் கிரிஸ்டியன் பிரித்தார். தொடக்க வீரரான ஜெயஸ்வால் 31 ரன்கள் எடுத்திருந்தபோது கிரிஸ்டியன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில் லூயிஸ் அரைசதம் அடித்தார்.

ராஜஸ்தான் 11 ஓவரில் 100 ரன்களை கடந்த நிலையில், கார்டன் பந்துவீச்சில் லூயிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தக்கட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் எட்டு விக்கெட் கையிலிருக்க 180-200 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த களத்திற்குவந்த வீரர்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்து நடையைக் கட்டத்தொடங்கினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆர்சிபி சுழற்பந்து வீச்சாளர் சஹால் நான்கு ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். மற்றொரு வீரரான ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆர்சிபிக்கு எளிதான வெற்றி

150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராத் கோலி, தேவ்தத் படிக்கல் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். 5.2 ஓவரில் அணி 48 ரன்கள் எடுத்திருந்தபோது தேவ்தத் படிக்கல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஷுர் ரஹ்மான் இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்த சில நேரத்திலேயே கேப்டன் கோலி 25 ரன்களுக்கு ரன் அவுடாகி வெளியேறினார். பின்னர் களத்திற்கு வந்த பாரத், மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஆர்சிபி அணியை வெற்றி இலக்கை நோக்கி எளிதாக் கொண்டு சேர்த்தனர். இறுதியில் 17.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆர்சிபி அணி வெற்றி இலக்கை அடைந்தது.

அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆறு பவுன்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். பாரத் 44 ரன்கள் அடித்தார். ஆர்சிபி பந்துவீச்சாளர் சஹால் ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த அபார வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் ஆர்சிபி மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி எட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.