ETV Bharat / sports

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்..! ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்!

author img

By

Published : Sep 28, 2020, 4:30 PM IST

IPL 2020: Clash of titans as Rohit's MI meet Kohli's RCB
IPL 2020: Clash of titans as Rohit's MI meet Kohli's RCB

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.28) நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்படன் ஆகியோர் இந்த சீசனில் முதல் முறையாக மோதவுள்ளதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தாலும், பஞ்சாப் அணியுடனான இரண்டாவது போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. மேலும் இந்த சீசனில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் காரணமாக, பல்வேறு தரப்பிலிருந்தும் கோலி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

விராட் கோலி
விராட் கோலி

ஏபிடி வில்லியர்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மட்டுமே ஆர்சிபி அணியின் பலமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தின் போது கேப்டன் விராட் கோலி நிச்சயம் விளையாடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிகல், இன்றைய போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் உமேஷ் யாதவ், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருவதினால், மும்பை அணிக்கெதிரான போட்டியில் இவர்களில் யார் இடம்பெறுவார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

டி வில்லியர்ஸ் - ஆரோன் ஃபிஞ்ச்
டி வில்லியர்ஸ் - ஆரோன் ஃபிஞ்ச்

தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விராட் கோலி இன்றைய போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதனையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ்:

நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், கொல்கத்தா அணியுடான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. வலிமையான பேட்டிங்கை கொண்டுள்ள மும்பை அணியில், ரோஹித் சர்மா மீண்டு தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

மேலும் அதிரடியில் மிரட்டி வரும் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதினால், இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் வெற்றியானது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பும்ரா
பும்ரா

அதேசமயம் பும்ரா, போல்ட் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் மும்பை அணியின் வெற்றியானது எளிதில் கிட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அணியில் சுழற்பந்துவீச்சாளர்களின் பற்றாக்குறை மும்பைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர்:

பெங்களூரு - மும்பை அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

மைதானம்:

இன்றைய போட்டி நடைபெறவுள்ள துபாய் மைதானமானது பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் புற்கள் நிறைந்த மைதானம் என்பதால் இன்னிங்ஸின் தொடக்கங்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் பிலீப்,கிறிஸ் மோரிஸ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தான் vs பஞ்சாப் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.