ETV Bharat / sports

SL vs WI: முதல் போட்டியிலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்ட இளம் வீரர்!

author img

By

Published : Nov 22, 2021, 11:09 AM IST

Jeremy Solozano
Jeremy Solozano

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்துகொண்டிருந்த மே.இ. தீவுகள் அணி வீரர் ஜெர்மி சோலோசானோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

காலி (இலங்கை): இலங்கை - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி 'காலி' பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (நவம்பர் 21) தொடங்கியது.

இப்போட்டியில், இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்றார். அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது.

ஷாட் லெக் பீல்டிங்கின்போது காயம்

போட்டியின் 24ஆவது ஓவரை ரோஸ்டன் சேஸ் வீசினார். அப்போது அறிமுக வீரர் ஜெர்மி சோலோசானோ ஷார்ட் லெக் (Short Leg) திசையில் (பேட்ஸ்மேன் மிக அருகில்) பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

அந்த ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே புல் ஷாட் (Pull Shot) அடிக்க முயற்சிக்க, பந்து ஜெர்மியின் தலையில் பலமாகத் தாக்கியது.

ஸ்கேன் எடுப்பு

ஜெர்மி, தலைக்கவசம் அணிந்திருந்தாலும் அந்தப் பந்து தாக்கிய தாக்கத்தால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, ஸ்டெர்ச்சர் (Stretcher) மூலம் மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இது குறித்து, மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அறிமுக வீரர் ஜெர்மியின் தலையில் பந்து தாக்கியதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக குணமடைவார் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தது.

மேலும், அவர் சுயநினைவுடன் இருக்கிறார் எனவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஷை ஹோப் ஃபீல்டிங்கில் ஈடுபடுகிறார்.

இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் (95.2 ஓவர்கள்) இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை கேப்டன் கருணாரத்னே 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: India vs New Zealand T20: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.