ETV Bharat / sports

Ind Vs Afg 3rd T20 : ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 10:42 AM IST

Ind Vs Afg 3rd T20 cricket
Ind Vs Afg 3rd T20 cricket

Ind Vs Afg 3rd T20 Cricket: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 17) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

பெங்களூரு : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 17) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடரை இந்திய அணி கைப்பற்றியதால், 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியிடம் இதுவரை ஒருமுறை கூட டி20 போட்டியில் தோல்வி கண்டது இல்லை என்ற சாதனையை பெற வேண்டுமானால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதேநேரம் முந்தைய இரண்டு ஆட்டங்களிலும் களமிறக்கப்படாத வீரர்களுக்கு 3வது டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்கவும் அதற்கு ஏற்ற வகையில் அணியில் மாற்றம் கொண்டு வரவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வீரர் ஷிவம் துபே நடப்பு தொடரில் நன்றாக விளையாடி வருகிறார். முறையே முதல் இரண்டு ஆட்டங்களிலும் 60 ரன் மற்றும் 63 ரன் என குவித்து இந்திய அணியில் நல்ல பங்களிப்பு அளித்து வருகிறார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அணிக்கான தனது பங்களிப்பை நன்றாக வழங்கி வருகிறார்.

அதேநேரம் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறார். வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்தால் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். கடைசி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தற்போதை விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா நன்றாக கீப்பிங் செய்து வரும் நிலையில் யாரை தேர்வு செய்வது என அணி நிர்வாகம் திணறி வருவதாக கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டை வெற்றி வேட்கையுடன் தொடங்கி உள்ள இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் சிறந்த வெற்றிக்கான கேப்டன் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற உள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நன்றாக விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் ரசித் கான் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக காணப்படுகிறது.

ஒயிட் வாஷ் தவிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 வெற்றி என இரண்டையும் பெற ஆப்கான் வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜன. 17) இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அல்லது சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங். முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் : இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மாவுல்லா உமர்சாய், ஷரஃபுதீன் அஷ்ரஃப், ஃபஃகல் ரக் நவீன் உல் ஹக், நூர் அகமது.

இதையும் படிங்க : கூச் பெஹார் டிராபியின் இறுதி போட்டியில் 404 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்த பிரகார் சதுர்வேதி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.