ETV Bharat / sports

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை.. 11 பந்தில் 6 விக்கெட்களை இழந்த இந்திய அணி!

author img

By PTI

Published : Jan 3, 2024, 10:49 PM IST

IND vs SA 2nd Test
இந்தியா தென்னாப்பிரிக்கா

IND Vs SA: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.03) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

சிறப்பான பந்து வீச்சு: தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் -எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர், சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 4 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி எடுத்த 7வது குறைவான ஸ்கோர் இதுவாகும். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மோசமான பேட்டிங்: இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேற, ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி நிலைத்து நின்று, அணியில் ஸ்கோரை உயர்த்தினர்.

ரோகித் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில்லும் 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது, ஸ்ரேயஸ் ஐயர் ரன்கள் ஏதும் எடுக்கமால் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின் வந்த கே.எல்.ராகுல் 8 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், லுங்கி இங்கிடி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

11 பந்தில் 6 விக்கெட்: பின்னர் வந்த ஜடேஜா, பும்ரா ஆகிய இருவரும் இங்கிடி வீசிய ஒரே ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணி 153 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் அடுத்த ஓவரை வீச ரபாடா வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தில் விராட் கோலி 46 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 4வது பந்தில் சிராஜ் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 153 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்த நிலையில், கண்ணை மூடித் திறப்பதற்குள் கடைசி 11 பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது.

இதையும் படிங்க: விளையாட்டு ஆர்வலர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் 2024... போட்டிகள் அட்டவணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.