ETV Bharat / sports

IND vs SL: தொடரை வென்றுகொடுத்து நாயகனானார் ஸ்ரேயஸ்; இந்தியா உலக சாதனை

author img

By

Published : Feb 28, 2022, 8:29 AM IST

India vs Sri Lanka
India vs Sri Lanka

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தரம்சாலா: இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.

டி20 தொடர் பிப்ரவரி 24இல் தொடங்கி இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில், மூன்றாவது போட்டி பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் உள்ள ஹெச்.பி.சி.ஏ. மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.

கேப்டன் இன்னிங்ஸ்

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஆனால், இலங்கை அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. குணதிலகா ரன்னேதும் இன்றியும், நிசங்கா 1 ரன்னிலும், அசலங்கா 4 ரன்களிலும், லியானாகே 9 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதையடுத்து, சண்டிமலும், கேப்டன் ஷனகாவும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். சண்டிமல் 22 ரன்களில் வெளியேறினாலும், ஷனகா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் 68 ரன்களை இலங்கை குவித்தது.

ரோஹித் - (துஷ்மன்) சமீரா

இலங்கைத் தரப்பில் கேப்டன் ஷனகா 74 ரன்களுடனும், கருணாரத்னே 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், சிராஜ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

147 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியது. இரண்டாவது ஓவரிலேயே ரோஹித் சர்மா, சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், வெள்ளைப் பந்து போட்டிகளில் சமீரா ஆறாவது முறையாக ரோஹித் சர்மாவின் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 18 ரன்களில், பவர்-பிளே முடிந்த அடுத்த ஓவரில் அவுட்டானார். ஒன் டவுனில் இறங்கிய ஸ்ரேயஸ் கடந்த போட்டியைப் போல இதிலும் வெளுத்து வாங்கினார். மறுமுனையில், தீபக் ஹூடா 21 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 5 ரன்களிலும் வெளியேற ஜடேஜா களம் புகுந்தார்.

ஃபினிஷர் ஜடேஜா

சென்ற போட்டியில், ஸ்ரேயஸ்-ஜடேஜா கூட்டணி மிரட்டலாக ஆடி 183 ரன்களையே எளிதாக அடைந்து அசத்தியிருந்தது. அதேபோன்று, இப்போட்டியிலும் இந்த ஜோடி அதிரடி காட்டத் தயங்கவில்லை.

ஸ்ரேயஸ் 29 பந்துகளில் அரைசதத்தைக் கடக்க, ஜடேஜாவும் விறுவிறுவென ரன்களைச் சேர்த்தார். இதனால், இந்திய அணி 16.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது.

ஸ்ரேயஸ் ஐயர் 73 ரன்களுடனும், ஜடேஜா 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் குமாரா 2 விக்கெட்டுகளையும், சமீரா, கருணாரத்னே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 12 வெற்றிகள்

இந்த வெற்றி மூலம் இந்திய அணி, டி20 தொடரை 3-0 கணக்கில் வென்று, இலங்கை அணியை வொய்ட்-வாஷ் செய்தது. ஆட்ட நாயகனாக மட்டுமல்லாமல் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 12 டி20 போட்டிகளை வென்று ஆப்கானிஸ்தானின் உலகச் சாதனையைச் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச ஜூடோ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து புடின் அதிரடி நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.