ETV Bharat / sports

World Cup Cricket 2023 : தாக்குபிடிக்குமா ஆப்கானிஸ்தான்? இந்தியாவுடன் இன்று மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 10:18 AM IST

Cricket
Cricket

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லி : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இன்று (அக். 11) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.

தொடக்க வீரர் சுப்மான் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதால் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக கடந்த ஆஸ்திரேலியா ஆட்டத்தை போல் இஷான் கிஷன் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் நல்ல வரிசை நிலையில் உள்ளது என்றே கூறலாம். கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய மூன்று பேரும் டக் அவுட் ஆன போதும், மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய கே.எல்.ராகுல், மற்றும் விராட் கோலி பொறுப்புனர்வுடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோல் இந்திய அணியில் பந்துவீச்சும் நல்ல நிலையில் உள்ளது. சுழற்பந்தில் குல்திப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் நல்ல பார்மில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் இணைந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேநேரம் அஸ்வினின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெற்ற போதும் 1 விக்கெட் மட்டுமே அவர் வீழ்த்தினார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவரது இருப்பிடம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மற்றபடி இந்திய அணி ஒரு சிறந்த கலவையாக உள்ளது என்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை வங்கதேசம் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு தான் அந்த அணியின் பிரதானம். அதிரடியாக மிரட்டக் கூடிய ரசித் கான், முகமது நபி உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

பேட்டிங்கில் அந்த அணி சற்று பலவீனமாகத்தான் கருதப்படுகிறது. இருப்பினும் இந்திய அணிக்கு சவால் அளிக்க போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டில் ஜொலித்த தமிழக வீராங்கனை..! பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது எப்படி?.. கூறுகிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.