ETV Bharat / state

ஆசிய விளையாட்டில் ஜொலித்த தமிழக வீராங்கனை..! பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது எப்படி?.. கூறுகிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 9:21 AM IST

Updated : Oct 11, 2023, 12:14 PM IST

Asian Games Champion Vidhya Ramraj Exclusive Interview with ETV Bharat Tamil Nadu : ஆசிய விளையாட்டில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம், 4X400 மகளிருக்கான தொடர் ஓட்டம் மற்றும் 4X400 கலப்பு தொடர் ஓட்டம் என இரண்டு பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று ஒட்டுமொத்த நாட்டையும் தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கம் வென்றது குறுத்து தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தனது சகோதரி நித்யா ராமராஜூடன், ஈ.டிவி பாரத் செய்தியாளர் ஆ.கிறிஸ்டோபரிடம் கலந்துரையாடியது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு!..

Etv Bharat
Etv Bharat

Athlet's Vidhya & Nithya Ramaraj Exclusive Interview at ETv Bharat Tamil Nadu

ஐதராபாத் : 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. நடப்பு சீசனில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

நடப்பு ஆசிய விளையாட்டில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பங்கு அளப்பறியது. பல்வேறு விளையாட்டுகளில் பதக்கம் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தனர். அந்த வகையில் தடகளம் பிரிவில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலமும், 4X400 மகளிர் தொடர் ஓட்டம் மற்றும் 4X400 மீட்டர் கலப்பு பிரிவு தொடர் ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கமும் வென்று நடப்பு ஆசிய தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார் வித்யா ராம்ராஜ்.

மேலும், தடகள பிரிவில் தங்க மங்கை பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையை சமன் செய்து ஒட்டுமொத்த விளையாட்டு ஆர்வலர்களின் பார்வையையும் தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளார் வித்யா ராம்ராஜ். வித்யா ராமராஜை போலவே அவரது சகோதரி நித்யா ராம்ராஜூம் தடகளத்தில் ஜொலித்து வருகிறார்.

இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டில் பங்கேற்ற முதல் இரட்டை சகோதரிகள் என்ற அரிய சாதனைக்கு இவர்கள் இருவரும் சொந்தக்காரார்களாகி உள்ளனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது சகோதரிக்கு ஈடாக பதக்கங்களை வென்று குவித்து உள்ள நித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டில் நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டார்.

ஆசிய விளையாட்டின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4வதாக வந்த நித்யா ராம்ராஜ் நூலிழையில் தனது பதக்க கனவை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதே போட்டியில் வித்யா ராம்ராஜ் 3வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்று இருந்தார். கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த நித்யா ராம்ராஜ் மற்றும் வித்யா ராம்ராஜ், ஈ.டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.

ஆசிய விளையாட்டில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டது குறித்து வித்யா ராம்ராஜ் கூறுகையில், தமிழகம் சார்பில் ஆசிய விளையாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் ஆசிய விளையாட்டு போன்ற பெரிய தொடர்களில் சகோதரியுடன் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கஷ்டப்படுவதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள் அப்படி நாங்கள் இருவரும் பார்க்கிறோம்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பல நேரங்களில் ஆதரவாக இருந்து வருகிறோம். நான் கஷ்டப்படும் நேரங்களில் நித்யா எனக்காக வந்து நிற்பார். அதேபோல் அவளுக்காக நான் என இருவரும் ஒன்றாக இணைந்து ஆசிய விளையாட்டில் பங்கேற்றோம். ஆசிய விளையாட்டில் நித்யா பதக்கம் வெல்லவில்லை என்றாலும் இருவரும் மனநிறைவாக உள்ளோம்.

பலரும் எங்களிடம் கேட்கும் கேள்வி, தடகள போட்டிகளில் சகோதரிகள் எப்படி கலந்து கொண்டு ஆசிய விளையாட்டுக்கு சென்றீர்கள் என்பது தான். இரட்டை சகோதரிகளாக ஆசிய விளையாட்டில் கலந்து கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி தான்.

ஆசிய விளையாட்டில் பி.டி உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்தது குறித்து வித்யா கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதம் சண்டிகரில் நடைபெற்ற 5வது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் பி.டி. உஷாவின் சாதனையை ஒரு விநாடியில் தவறவிட்டேன். அந்த சாதனையை சமன் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது பயிற்சியாளர் உறுதியாக இருந்தார். அந்த இடத்தை நான் அடைவேன் என்று.

பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் சமமான இலக்கில் இருப்பது சந்தோஷம். எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தான். அந்த ஆட்டத்தில் இந்த சாதனையை முறியடிப்பேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கிறேன். பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்ததால் தான் எனது பெயர் இவ்வளவு பிரபலமாகி உள்ளது.

பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த பின்னரே பலரது பார்வையும் என் மீது விழுந்து உள்ளது. அந்த சாதனையை வைத்தே பலர் என்னை அழைக்கின்றனர். இந்த 39 ஆண்டுகளில் பலர் அந்த சாதனையை முறியடிக்க முயற்சித்து இருக்கலாம். ஆனால் இன்று வரை யாரும் அதை செய்து காட்டாதது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணம் குறித்து வித்யா ராம்ராஜ் கூறுகையில், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது என்பது ஒரு தடகள வீரர் வீராங்கனைக்கு பெரிய சாதனையான விஷயம். உலக அரங்கில் ஆசிய விளையாட்டு 4வது பெரிய விளையாட்டு தொடராக காணப்படுகிறது.

அப்படிப்பட்ட தொடரில் பதக்கம் வெல்வது என்பது மகிழ்ச்சியான தருணம் தான். அதேநேரம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனையினுடைய நாட்டின் தேசிய கீதம் ஒலிக்க விடப்படும். வெண்கலம் வென்றதால் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்படவில்லை. நமது பதக்கத்துடன் மேடையில் நின்ற போது இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்படாதது மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

அடுத்த முறை அந்த மன வருத்தத்தையும் நீக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றபடி ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். அந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் குடும்பம் சந்திக்கும் இன்னல்கள் குறித்து வித்யா மற்றும் நித்யா கூறுகையில், எங்களது அப்பா, அம்மா சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்களது விளையாட்டு பயணத்திற்காக அவர்கள் பல விஷயங்களை தியாகம் செய்து உள்ளனர். அடுத்ததாக எங்களது அக்கா. அக்கா என்பவர் அடுத்த தாயை போலத் தான் பல நேரங்களில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து உள்ளார்.

கைக் குழந்தை உள்பட இரண்டு குழந்தைகளை வைத்து இருக்கும் போது எங்களுக்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். கடந்த 8 மாதங்கள் ஆசிய விளையாட்டிற்காக நாங்கள் தயாராகிக் கொண்டு இருந்ததால் குடும்பத்தினருடன் சரியான நேரத்தை செலவிட முடியவில்லை.

அதை பற்றி எதுவும் கவலை கொள்ளாமல் எங்களது அக்கா மற்றும் அம்மா பல உதவிகளை செய்தனார். இருவரும் சென்னை வந்த போதும் அவர்களை ஒரு இடத்திற்கு கூட கூட்டிச் சென்று காட்ட முடியாத சூழலில் இருந்தோம். ஆனால் அதை அவர்கள் ஒருபோதும் எங்களிடம் எதிர்பார்த்ததும் இல்லை.

இதையும் படிங்க : World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?

Last Updated : Oct 11, 2023, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.