ETV Bharat / sports

விரக்தியில் அன் ஃபாலோ (unfollow) செய்த ரசிகர்கள்.. மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் நீக்கத்தின் பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 8:46 PM IST

Rohit sharma
Rohit sharma

Mumbai Indians: ரோகித் சர்மாவை மும்பை இந்தியன் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. அண்மையில் இதற்கான டிரேட் முறை நடைபெற்ற நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்தது.

Twitter
Twitter

இதனைத் தொடர்ந்து, குஜராத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் வரும் 19ஆம் தேதி இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கி, டிரேட் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

Instagram
Instagram

இந்த செய்தி ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயல் ரோகித் சர்மாவை அவமதிப்பது போன்ற செயல் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அன்ஃபாலோ செய்து உள்ளனர்.

இந்த செயல் ரசிகர்களின் விரக்தியைக் காட்டுகிறது. இதுவரையில் சுமார் 4 லட்சம் பேர் அன்ஃபாலோ செய்து இருக்கின்றனர். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் 'ஹாட் பிரேக்' எமோஜியை தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் எதிர்காலம்: கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வழிநடத்தி வந்த ரோகித் சர்மா, இதுவரையில் அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்கள் வரிசையில் இவரும் ஒருவராக தற்போது வரை இருக்கிறார். இனியும் அவரின் பெயரைக் காலம் சொல்லும். இப்படியான ஒரு கேப்டனை தான் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

ஆனால் இந்த முடிவு அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது; "வருகாலங்களை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்ற மும்பை அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரோகித்தின் தலைசிறந்த கேப்டன்சிக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஐபிஎல் வரலாற்றிலேயே தலைசிறந்த கேப்டன்களில் அவரும் ஒருவர். மேலும், அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

ஹர்திக்கை கேப்டனாக்கியதில் மும்பை அணிக்குப் பல நன்மைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குஜராத் அணிக்கு கேப்டன் பதவியை வகித்த அவர் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலே அந்த அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். கடந்த ஆண்டு கூட அந்த அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

அதேசமயம் வரும் காலங்களில் இந்திய அணியையும் முன் நின்று வழிநடத்த இருக்கிறார். இவைகளை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கி இருக்கலாம். ஒருவேளை ரோகித் சர்மா உலகக் கோப்பையை வென்றிருந்தால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக சில ஆண்டுகள் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர் கோப்பையை வெல்லவில்லை. அதேபோல் கடந்த ஆண்டுகளில் அவர் ஐபிஎல் தொடர்களில் பெரிதாக ஃபார்மிலும் இல்லை. இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கையில் ஹர்திக்கை கேப்டன் ஆகியதற்கான அர்த்தம் புரிந்து விடும்.

ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கினாலும், அவர் அணியில் தொடருவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் கூறி வருகிறது. இருப்பினும் வரும் சீசனில் அவரது இடம் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 2024 சீசனில் ரோகித் சர்மாவை இம்பாக்ட் வீரராகக் களம் இறக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்து வருக்கின்றனர்.

2024 ஐபிஎல் சீசனுக்கு பின் மெகா ஏலம் ஒரு வேலை நடைபெற்றாலாம். அப்படி நடைபெறும் பட்சத்தில் அனைத்து அணிகளும் வீரர்களைக் களைத்து போட்டுக்கொள்வார்கள். அப்படி இருக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை தக்கவைத்து கொள்வது சந்தேகம் தான். வேறு சில அணிகள் அவரை வாங்க முயற்சித்தாலும், ஐபிஎல்யின் தொடக்கம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக இருந்து வந்த அவர், மற்ற அணிகளுக்குச் செல்வதும் சிரமம் தான். இப்படியான நிலையில், ரோகித் சர்மா ஒன்று 2024 சீசனுக்கு பிறகு விடைபெறலாம் அல்லது அணியின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கிடைக்கும் இடத்தில் விளையாடலாம்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய மகளிர் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.