ETV Bharat / sports

ENG vs IND: ஏழு ஆண்டுகள் கழித்து லார்ட்ஸில் சதம்; ராகுல் அசத்தல்

author img

By

Published : Aug 13, 2021, 6:48 AM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கே.எல். ராகுல் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைச் சேர்த்துள்ளது.

eng vs ind lords
ராகுல் அசத்தல்

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஆக. 12) தொடங்கியது. இந்த முறையும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸை இழக்க, இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நல்ல தொடக்கத்தை அளித்த ரோஹித் - ராகுல் இணைதான் இந்தப் போட்டியிலும் களமிறங்கியது. லார்ட்ஸ் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது.

ஓப்பனிங் ஓகே

அதற்கு ஏற்றார், ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஓல்லி ராபின்சனும் ஓப்பனிங் ஸ்பெல்லை அருமையாக வீசினர். குறிப்பாக, ஆண்டர்சன் அவுட்-ஸ்விங், இன்-கம்மிங் டெலிவரி என ரோஹித், ராகுல் இருவரையும் பெரிய ஷாட்டை நினைத்துக்கூட பார்க்கவிடாது பந்து வீசினார்.

அடுத்து சாம் கரன் பந்துவீச வந்த நிலையில், ரோஹித் சர்மா சற்று துணிந்து ஆட ஆரம்பித்தார். சாம் கரன் வீசிய ஒரு ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து, ரோஹித் ஒரு பக்கம் ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

46 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்கு பின்னர், ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ராபின்சன், மார்க் வுட், மொயின் அலி என அனைவரின் ஓவரிலும் சிறுகச் சிறுக ரன்களை ரோஹித் சர்மா சேர்க்க தொடங்கினார். மறுமுனையில் கே.எல். ராகுல், மிக பொறுமையாக ஆடினார்.

இந்திய அணி 71 ரன்கள் எடுத்தபோது ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் தனது 13ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். ரோஹித்-ராகுல் இணை விக்கெட்டுகளை இழக்காமல் 100 ரன்களை கடந்து தொடர்ந்து விளையாடி வந்தது.

அசத்தும் ஆண்டர்சன்

இந்நிலையில், 42ஆவது ஓவரில் ஆண்டர்சன் மீண்டும் பந்துவீச வந்தார். அப்போதும், ரோஹித் சர்மா சற்றுத் திணறி வந்தார். ஆண்டர்சனின் அடுத்த ஓவரை ரோஹித் சர்மாதான் எதிர்கொண்டார். அந்த மூன்றாவது பந்தில் ஆண்டர்சனின் துல்லியமான இன்-கம்மிங் பந்துவீச்சு ஸ்டெம்பை பதம் பார்த்தது.

அந்நிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரோஹித் சர்மாவை 83 ரன்களில் ஆண்டர்சன் அசால்டாக வெளியேறிவிட்டார். அடுத்து புஜாரா களம்கண்டார். நீண்ட நாள்களாக பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காமல் விளையாடி வந்த புஜாரா இப்போட்டியிலாவது நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்ப்பட்டது.

ஆனால், கடந்த போட்டியைப் போலவே புஜாரா, ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அநாவசியமாக அடிக்க சென்று, மூன்றாவது சிலிப்பில் கேட்ச் கொடுத்து, 7 ரன்களில் புஜாரா ஆட்டமிழந்தார்.

ராகுல் - கோலி பாட்னர்ஷிப்

நான்காவது வீரராக கேப்டன் விராட் கோலி களம் காண ராகுல் மறுபக்கம் தனது 13ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். இதையடுத்து, இந்தியா 2 விக்கெட்டு இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்த நிலையில், தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், களமிறங்கிய ராகுல், ரோஹித் சர்மா தவறவிட்ட சதத்தை நோக்கி சீராக நகரத் தொடங்கினார். விராட் கோலியும் மறுமுனையில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்தியா 64ஆவது ஓவரிலேயே 200 ரன்களைக் கடந்தது.

ராகுல்-கோலி பாட்னர்ஷிப்பை பிரிக்க நினைத்த இங்கிலாந்து பல முயற்சிகளைக் கையாண்டது. ஆனால், அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கே.எல். ராகுல் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் பதிவு செய்தார்.

ஹானர் போர்ட்டில் ராகுல்

லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கும் பேட்ஸ்மேன்களின் பெயர்களையும், ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களின் பெயர்களையும் 'ஹானர் போர்ட்' (Honour Board)இல் சேர்ப்பது வழக்கம்.

அந்த வகையில், 2014ஆம் ஆண்டு ராஹானே அடித்த சதத்திற்கு பிறகு, கே.எல். ராகுல் சதமடித்து ஹானர் போர்டிஇல் இடம்பெற்றுள்ளார். கே.எல்.ராகுல் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடிக்கும் பத்தாவது இந்திய வீரர் ஆவார்.

அவசரப்பட்டுட்டிங்களே கோலி...

இதையடுத்து, கேப்டன் கோலியும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 42 ரன்களில் விராட் ராபின்சனிடம் வீழ்ந்தார். சமீபத்திய போட்டிகளைவிட நேற்றைய போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வந்தார்.

ராபின்சன் அந்தப் பந்தை ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வீச, கோலி பேட்டின் முனையில் பட்டு ஸ்லிப்பில் இருந்த ரூட்டின் கையில் தஞ்சம் புகுந்தது. அப்போது, ஆட்டநேரம் முடிவு பெற ஐந்து ஓவர்களே இருந்தது குறிப்பிடதக்கது.

இதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் (90 ஓவர்கள்) இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைச் சேர்த்துள்ளது. கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

சாதனையை முறியடிப்பாரா ராகுல்?

1952ஆம் ஆண்டு வினோ மன்கட் அடித்த 184 ரன்களே, இந்தியர் ஒருவர் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்துள்ள அதிகபட்ச ரன்கள். இதை இன்று (ஆக.13) ராகுல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டையும், ராபின்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

முதல்நாள் போட்டி செஷன் வாரியாக...

முதல் செஷன் - 18.4 ஓவர்கள் - 46/0

இரண்டாவது செஷன் - 33.2 ஓவர்கள் - 111/2

மூன்றாவது செஷன் - 38 ஓவர்கள் - 117/1

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கிறது.

இதையும் படிங்க: பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.