ETV Bharat / sports

மோர்கன் ‌தலைமையில் கேகேஆர் கோப்பையை கைப்பற்றுமா?

author img

By

Published : Apr 8, 2021, 4:31 PM IST

Kolkata Knight Riders, KKR, IPL, IPL 14, IPL 2021, Eoin Morgan, Andre Russell, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேகேஆர், ஐபிஎல் 2021, ஐபிஎல் 14
மோர்கன் ‌தலைமையில் கேகேஆர் கோப்பைக் கைப்பற்றுமா?

கொல்கத்தா கம்பீரின் கேப்டன்சியில் இரு ஐபிஎல் கோப்பைகளை வென்றது. அப்போது அணியின் துருப்புச் சீட்டாக இருந்தவர்கள் நரைனும் ரஸ்ஸலும் தான். ஆனால் கடந்த தொடரில் அவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

ஐபிஎல் 2020 தொடரில் இறுதிநேர நெட் ரன்ரேட் குறைவால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது‌ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆரம்பக்கட்ட போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் கேப்டனாகவும் செயல்பட்டனர். இதுபோன்ற குழப்பமான முடிவுகள்தான் அணியின்‌ வெற்றியைப் பாதித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

குழுக்கல் முறையில் தொடக்கம்

கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு நிலையான தொடக்க வீரராக சுப்மேன் கில் மட்டுமே இருந்தார். ஆரம்ப போட்டிகளில் சுனில் நரைன் அவருடன் விளையாடினார். நரைன் சற்று தடுமாற அடுத்து ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது கேகேஆர். அவரும் திருப்திகரமான ஆட்டத்தை அளிக்காததால், ஒருபோட்டியில் பான்டணை இறக்கியது. மீண்டும் பான்டணுக்கு பதிலாக நடுவரிசையில் களம்காணும் நிதிஷ் ராணாவை கில்லுடன் தொடக்கத்தில் களமிறங்கியது.

சுப்மன் கில் நிலையாக தொடக்கத்தில் இறங்கினாலும் பெரிய அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கவில்லை. இது பின்வரிசை வீரர்களுக்கு பெருஞ்சுமையாக அமைந்தது என்றே கூறலாம்.

எங்கு வீழ்ந்தது கேகேஆர்

கொல்கத்தா கம்பீரின் கேப்டன்சியில் இரு ஐபிஎல் கோப்பைகளை வென்றது. அப்போது அணியின் துருப்புச் சீட்டாக இருந்தவர்கள் நரைனும் ரஸ்ஸலும் தான். ஆனால் கடந்த தொடரில் அவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

நான்காவது, ஐந்தாவது வீரர்களாக களமிறங்கும் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓரிரண்டு போட்டிகளில் ஜொலித்தாலும் தொடர்ச்சியான அதிரடிகளை வெளிப்படுத்தத் தவறினர். இளம் வீரர் ரிங்கு சிங்கிடம் அணியின் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. புதிதாக அணியில் இணைந்துள்ள கருண் நாயரும் மிடில் ஆர்டரில் அணிக்கு பலம் சேர்க்கலாம்.

பந்துவீச்சின் பரிமாணம்

கேகேஆர் இத்தொடரின் ஆரம்பக் கட்டத்தில் சென்னையில் விளையாடவுள்ளது. சென்னை சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுனில் நரைன் அல்லது ஷகிப் அல் ஹசன், அபாய ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்றோர்‌ உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்பலாம்.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடும் லெவனில் நிச்சயமாக இடம்பிடிப்பார்கள். கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பென் கட்டிங், லாக்கி பெர்குசன் ஆகியோரை போட்டிச் சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பார்கள் என்றே தெரிகிறது.

பிரசித் கிருஷ்ணா சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டு கேகேஆர் அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம்.

இங்கிலாந்து அணியை டி20 போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த அணியாக மாற்றிய மோர்கன், கேகேஆருக்கு மூன்றாவது முறை கோப்பை வென்று தருவாரா என்று கார்த்திருந்து காண்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மேன் கில், நிதிஷ் ராணா, டிம் செஃபெர்ட், ராகுல் திரிபாதி, ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, சந்தீப் வாரியர், பிரசீத் கிருஷ்ணா, ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, கருண் நாயர், ஹர்பஜன் சிங், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், பவன் நேகி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.