ETV Bharat / sports

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் முதல் 'I Retire' பதிவு வரை: 2020 பேட்மிண்டன் ஓர் பார்வை!

author img

By

Published : Dec 30, 2020, 10:17 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு பல்வேறு பேட்மிண்டன் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தது, பி.வி. சிந்து ஓய்வுபெற்றதாக வதந்திகள் பரவியது என சில முக்கிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. அது குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
badminton year ender 2020
badminton year ender 2020

2020 பேட்மிண்டன் ஓர் பார்வை

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்

ஜனவரி மாதம், ஜகர்தாவில் நடைபெற்ற இந்தோனேஷியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாம் சுற்றில் உலகச் சாம்பியனும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி. சிந்து, ஜப்பானின் சயகா தக்காஹஷி (Sayaka Takahashi) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பிவி சிந்து
பிவி சிந்து

இதில் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, 21-16, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் சயகா தக்காஹஷியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன்

மான்சி சிங்
மான்சி சிங்

இந்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹரியானைவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மான்சி சிங், 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த மேகனா ரெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக (2019, 2020) இரண்டு முறை ஜூனியர் ரேங்கிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்த சாய்னா

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவிற்காக சர்வதேச பேட்மிண்டன் விளையாட்டில் 24 பட்டங்களையும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.

பாஜகவில் இணைந்த சாய்னா நேவால்
பாஜகவில் இணைந்த சாய்னா நேவால்

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பாஜக மூத்தத் தலைவர் அருண் சிங் முன்னிலையில், அக்கட்சியில் சாய்னா நேவால், அவரது மூத்த சகோதரியான சந்திரான்ஷும் பாஜகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசும் பொருளாக மாறியது.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

இந்தாண்டு பிப்ரவரி மாதம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், ஆடவர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி , நடப்புச் சாம்பியன் இந்தோனேஷியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இந்திய பேட்மிண்டன் அணி
இந்திய பேட்மிண்டன் அணி

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 2-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியைத் தழுவி மூன்றாமிடத்தைப் பிடித்தது. இதனால் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

விக்டர் ஆக்செல்சன்

2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் கடந்த மார்ச் மாதம் லண்டனில் நடந்தது. இதன் ஆடவர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தைவானின் டை சூ யிங்கை எதிர்த்து விளையாடினார்.

விக்டர் ஆக்செல்சன்
விக்டர் ஆக்செல்சன்

இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய விக்டர் 21-13, 21-14 என இரு செட்களையும், அடுத்தடுத்து கைப்பற்றி டை சூ யிங்கிற்கு அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் விக்டர் ஆக்செல்சன் ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றும் சாதித்தார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் முடிவடைந்த பிறகு, அதில் பங்கேற்ற தைவான் அணியின் மாற்று வீரர் ஒருவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, டென்மார்க் பேட்மிண்டன் வீரர் ஹான்ஸ்-கிறிஸ்டியன் விட்டிங்கஸ் (Hans-Kristian Vittinghus) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

இதனையடுத்து இந்தியா சார்பில் இத்தொடரில் பங்கேற்ற நட்சத்திர வீரர்கள் சாய்னா நேவால், பாருப்பள்ளி காஷ்யப், அஜய் ஜெயராமன், அஸ்வினி பொன்னப்பா, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர், சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வீரர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுவருகிறது எனக் கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் தகுதிச்சுற்று போட்டிகளை அடுத்தாண்டிற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அறிவித்தது. இது குறித்து அக்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "2021ஆம் ஆண்டின் முதல் 17 வாரங்களில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும்.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட பேட்மிண்டன் தொடர்களும் இதில் அடங்கும் என்பதையும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிடாம்பி ஸ்ரீகாந்த்

கிடாம்பி ஸ்ரீகாந்த்
கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் டியென் செனை எதிர்த்து ஆடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 22 -20, 13-21, 16-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

சார்லார்லக்ஸிலிருந்து இந்திய அணி விலகல்

லக்‌ஷயா சென்
லக்‌ஷயா சென்

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் ஜெர்மனியில் சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

இத்தொடரில் இந்தியா சார்பாக நடப்புச் சாம்பியன் லக்‌ஷயா சென் உள்ளிட்ட பல வீரர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் டிகே சென்னிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்தொடரிலிருந்து இந்திய அணி முற்றிலுமாக வெளியேறியது.

பிவி சிந்து 'I Retire' ட்வீட்

பிவி சிந்து
பிவி சிந்து

கரோனா வைரஸ் தொடர்பாக 'I Retire' என்ற தலைப்பில் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிக்கை ஒன்றை கடந்த நவம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் பி.வி. சிந்து சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதாகப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டு சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.

இதனிடையே சிந்து ஓய்வுபெற்றுவிட்டார் என்ற செய்தி பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பி.வி. சிந்துதான் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும், கரோனா வைரஸ் சூழலில் இருந்து வெளிவருவதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்ற கருத்திலேயே அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சானியா கம்பேக், பயஸ் ஓய்வு, விம்பிள்டன் ரத்து: 2020ஆம் ஆண்டின் டென்னிஸ் நிகழ்வுகள் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.