ETV Bharat / state

சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை கமிஷனருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - Savukku Shankar Goondas Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 12:26 PM IST

Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பெண் காவலர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக கடந்த 4ஆம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகள் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார். தற்போது, இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும், பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்" என சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "என் மகன் அப்படி செய்யவில்லை"- சவுக்கு சங்கரின் தாயார் நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.