ETV Bharat / sitara

2022இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்!

author img

By

Published : Jan 11, 2022, 3:43 PM IST

2022ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்!
2022ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்!

2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரது படங்களும் வெளியாக உள்ளன. அதில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களை இப்போது பார்க்கலாம்.

வலிமை

போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலம் நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரவு நேர ஊரடங்கு போன்ற காரணங்களால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் உள்ளனர். தங்களது விருப்பமான நடிகரைத் திரையில் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர். வலிமை எப்போது வெளியானாலும் வெற்றிபெறுவது உறுதி என்றும் அவர்கள் கூறிவருகின்றனர். இதனால் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் வலிமையும் ஒன்று.

பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், இப்படத்தில் விஜயை எப்படி கையாண்டுள்ளார் என்பதைக் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

வரும் ஏப்ரலில் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஒரு தரமான பொழுதுபோக்கு படத்திற்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு என்ற எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்தான் படத்தின் மையக்கரு என்று தகவல் பரவிவருகிறது.

மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்துக் கதையில் சூர்யா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெய்பீம் படத்திற்குப் பிறகு சூர்யாவின் மதிப்பு கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளதால் இப்படமும் சூர்யாவிற்கு வெற்றிப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாறன்

துருவங்கள் பதினாறு', 'நரகாசூரன்', 'மாஃபியா' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தனுஷை வைத்து மாறன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன் நாயகியாக இதில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முதன்முறையாக கார்த்திக் நரேன் படத்தில் தனுஷ் நடிப்பதால் ரசிகர்களிடயே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வெந்து தணிந்தது காடு

விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி இணையும் புதிய படம்தான் ‘வெந்து தணிந்தது காடு’. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனது 47ஆவது படமான இப்படத்திற்கு சிம்பு, 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியிருக்கிறார்.

வழக்கமான கௌதம் மேனன் படமாக இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறு. படத்தின் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோக்களே அதற்குச் சாட்சி. சிம்பு தற்போது மாநாடு வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படமும் அதே போன்ற வெற்றியைத் தரும் என்று இவரது ரசிகர்கள் மட்டுமின்றி சிம்புவும் நம்புகிறார்.


விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம். தற்போது இருக்கும் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி, மாஸ்டர் எனத் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவரது இயக்கத்தில் மூன்று நடிப்பு அரக்கர்கள் நடிப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இப்படம் உள்ளது.

கோப்ரா

’இமைக்கா நொடிகள்’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படமும் இரண்டு ஆண்டுகளாகப் படப்பிடிப்பில் உள்ளது.

விக்ரமின் பலவிதமான கெட்டப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து இந்தாண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மகான்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் விக்ரம் ரவுடியாகவும் துருவ் விக்ரம் காவல் அலுவலராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் மறக்க முடியாத படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’ஜகமே தந்திரம்’ படத்தில் சொதப்பிய கார்த்திக் சுப்பராஜ் இதில் விட்டதை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக ஓடிடியில் படம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

டான்

அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்தான் ’டான்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டாக்டர் வெற்றிக்குப் பிறகு இப்படத்திலும் பிரியங்கா மோகன் எஸ். கேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கல்லூரி கதை என்பதால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

அயலான்

இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக நடிக்கும் படம் அயலான். முதன்முதலாக ஏஆர். ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சைன்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாகிவருகிறது. வெகுநாள்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படம் நிதிச் சிக்கல், கிராஃபிக்ஸ் பணிகளினால் தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ரஜினி படம் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிம்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.