ETV Bharat / opinion

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் இடைவெளி! அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 6:34 PM IST

Updated : Jan 17, 2024, 9:27 PM IST

Thinning of credit supply to MSME
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

MSME: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 111 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. நாட்டின் ஜிடிபியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் இந்த MSME துறை 20 முதல் 25 டிரில்லியன் கடன் இடைவெளி காரணமாக பெரும் மூலதன பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

ஹைதராபாத்: இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பென்னார் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் பி.வி.ராவ், “இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro Small and Medium Enterprises - MSME) தொடர்ச்சியாக 30 சதவீதம் பங்குவகித்து வருகின்றது. 111 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்கும் இந்த துறை அதன் கடன் தேவையான 37 ட்ரில்லியனில் வெறும் 14.5 ட்ரில்லியனை மட்டும் பெற்று 20 - 25 ட்ரில்லியன் கடன் இடைவெளியைச் சந்திக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கடன் இடைவெளி 530 பில்லியன் டாலர்கள். எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் தேவையான 819 பில்லியன் டாலர்களில் இருந்து 289 பில்லியன் டாலர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் வங்கிகள் போன்ற முறையான நிதி அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகித்தும் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் இடைவெளி தீராத சிக்கலாகவே உள்ளது என முதலீட்டு நிறுவனமான (investment banking) அவெண்டஸ் கேபிடல் (Avendus Capital) தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வணிக அமைப்பில் எம்எஸ்எம்இ பெரும் பங்கு வகித்த போதிலும் அதன் கடன் இடைவெளி காரணமாக அதன் முழுத் திறன் வெளிக்கொணரப் படாமல் உள்ளது. வளரும் நாடுகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன என உலக வங்கியின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

புதிதாகப் படித்து முடித்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக 2030ஆம் ஆண்டிற்குள் 600 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. உலகளவில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதன் கடன் இடைவெளியைக் குறைத்து எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பில் எம்எஸ்எம்இ முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மொத்த தொழில்துறை உற்பத்தியில் 45 சதவீதம், மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்களிக்கின்றது. நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிலும் எம்எஸ்எம்இ துறை நன்கு கால்பதித்துள்ளது.

இத்தகைய பங்களிப்பை நாட்டிற்கு வழங்கிய போதும் எம்எஸ்எம்இ துறை இந்தியாவின் நிதிச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்படவில்லை. 64 மில்லியன் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்தியாவில் இருந்த போதும் அதில் 14 சதவீதம் மட்டுமே கடன் உதவி பெற முடிகிறது. இதனால் எம்எஸ்எம்இ தொழில்துறை செயலற்ற நிலையில் உள்ளது. 80 சதவீதம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வங்கிகளின் கடன் வரம்பிற்கு வெளியே இருப்பதால் தனியார் நிதி சேவையை நாட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடன் மற்றும் பணப்புழக்கத்திற்கான கொள்கையை உருவாக்க அரசு பலமுறை நடவடிக்கை எடுத்திருந்தாலும் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் கடன் ஓட்டம் குறைவாகவே உள்ளது. கரோனா தொற்றிற்குப் பிறகு வங்கித் துறையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் போன்றவை கடன் இடைவெளியைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதனால் ஆன்லைன் கடன் வழங்குதலில் 2 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது என BLinc அறிக்கை தெரிவிக்கிறது.

முன்பு கடன் வழங்குபவர்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி கடன் வழங்கினர். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வழிகாட்டுதல்களின் படி கடன் வழங்குவோர் POS சேனல்களைப் பயன்படுத்திக் குறுகிய கால கடன் வழங்கி வருகின்றனர்.

மேலும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் எம்எஸ்எம்இ துறையில் இருக்கும் கடன் இடைவெளியைக் குறைக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் திருச்சூர் மேலாண்மை சங்கத்தின் 31வது ஆண்டு மேலாண்மைக் கூட்டத்தில் பேசிய ராஜேஷ்வர் ராவ், இந்தியாவில் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் தேவைக்கும் கடன் பெறும் விகிதத்திற்கும் உள்ள இடைவெளியை வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களுக்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் விகிதம் கரோனா தொற்று காலத்தில் இருந்ததை விட 2021- நிதி ஆண்டில் 20 சதவீதமும், 2022-நிதி ஆண்டில் 35 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடன் இடைவெளியைக் குறைப்பதற்கு இது ஒன்று மட்டும் போதாது. இன்னும் பல புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

எம்எஸ்எம்இ துறையின் கடன் இடைவெளியைக் குறைப்பது ஈக்குவிட்டி பைனான்ஸ் (equity finance), பியர் டு பியர் லெண்டிங் (peer to peer lending -P2P) போன்ற பிற நிதி அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவும். எம்எஸ்எம்இ துறையின் நிதி மேம்பாட்டிற்காக அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கொண்டிருந்தாலும் இந்த துறை சரியான நேரத்தில் போதுமான நிதியைப் பெறுவதில் சிரமத்தைச் சந்திக்கிறது.

வங்கிகள் தங்களை ஒரு கடன் வழங்குநராக மட்டும் சிந்திக்காமல், நிறுவனங்களின் பங்குதாரராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோரைக் கண்டறியவும் அவர்களுக்குக் கைகொடுக்கவும் வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வி விகிதம் அதிகமாக இருக்கலாம் ஆனால் அவை வளர்ச்சி அடைவதற்கு நிதி உதவி அவசியம்.

கடன் உத்தரவாதம் (Credit guarantee) என்பது கடனை எளிதாக்குவதற்கான வழி அல்ல. ஆனால் கடன் பெறுவதற்குப் பிணை (collateral) இல்லாத காரணத்தினால் நல்ல தொழில் திட்டங்களுக்குத் தேவையான நிதி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. ஆனால் கடன் உத்தரவாதத்தின் (Credit guarantee) கீழ் கடன் வழங்கும் போது நிறுவனங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எனவே வங்கிகள் இத்திட்டத்தினை தொழில் முனைவோர் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும்.

ஏலத்திற்கான படிவங்களை இலவசமாக வழங்குவது, ஏல டெண்டர்களில் வைப்புத் தொகைகளில் (Earnest Money Deposit - EMD) இருந்து விலக்கு, செக்யூரிட்டி டெபாசிட்களில் (Security Deposit) விலக்கு போன்ற நடவடிக்கைகள் எம்எஸ்எம்இ துறை வளர்ச்சிக்கு அரசுத் தரப்பில் இருந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவி விலகக்கோரி ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம்!

Last Updated :Jan 17, 2024, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.