ETV Bharat / international

ரஷ்யாவின் 'லூனா-25' நிலவில் விழுந்து நொறுங்கியது ஏன்? - முழு தகவல்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:29 PM IST

Updated : Aug 23, 2023, 10:42 AM IST

Russia
லூனா25

Russia's Luna 25 lander crashed: சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக நிலவின் தென் துருவத்தை நோக்கி களமிறங்கிய ரஷ்யாவின் "லூனா-25" விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஹைதராபாத்: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் இந்த விண்கலம் நுழைந்த நிலையில், அதன் பிறகு படிப்படியாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுப்பாதையில் லேண்டர் உள்ளது. விண்கலத்தின் லேண்டர் நேற்று(ஆகஸ்ட் 21) ஆர்பிட்டருடனும் வெற்றிகரமாக தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. நாளை மாலையில் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 'லூனா-25' என்ற விண்கலத்தை ரஷ்யா கடந்த 11ஆம் தேதி விண்ணில் ஏவியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த லூனா-25, சந்திரயான்-3 தரையிறங்கும் அதேநாளில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என ரஷ்யா தெரிவித்ததால், லூனா-25 சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக அனுப்பப்பட்டுள்ளதாக பேசப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாகவே தரையிறங்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா-25 லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. விண்கலத்தின் இயந்திரங்கள் சரியாக செயல்படாததால் லேண்டர் நிலவில் மோதியதாக கூறப்பட்டது. இதனால், ரஷ்யாவின் லூனா-25 கனவு தோல்வியடைந்துவிட்டது.

இந்த நிலையில், லூனா-25 திட்டம் தோல்வியடைய காரணம் என்ன? விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது எப்படி? உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆராயலாம்...

என்ன காரணம்?

லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைமை இயக்குனர் யூரி போரிசோவ் விளக்கமளித்துள்ளார். அதில், "திட்டமிட்டபடி லூனா-25 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. நிலவுக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் நிறுத்தி, தரையிறங்க தயாராகும்போது, இன்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது. இன்ஜின்களில் இயக்கத்தை நிறுத்த திட்டமிட்டப்படிருந்தது. ஆனால், இன்ஜின்களை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக லேண்டர், வேறு ஒரு சுற்றுப்பாதைக்குச் சென்றுவிட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு, லேண்டர் கீழே விழுந்து நொறுங்கியது" என்று கூறினார்.

லூனா-25 எடுத்த நிலவின் தென் துருவப் புகைப்படம்
லூனா-25 எடுத்த நிலவின் தென் துருவப் புகைப்படம்

லூனா-25 தொடர்பு துண்டிக்கப்பட்டது எப்போது?

"கடந்த 19ஆம் தேதி பிற்பகல் 2.57 மணி வரை, ரோஸ்கோஸ்மோஸ் விண்கலத்துடன் தொடர்பில் இருந்தது. அதன் பிறகுதான் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் பிறகு லேண்டர் ஆனது திட்டமிடப்படாத சுற்றுப்பாதைக்கு சென்று, நிலவின் மேற்பரப்பில் மோதியது. ரஷ்யா சுமார் 50 ஆண்டுகளாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபடாமல் இருந்ததும், இந்த தோல்விக்கு முக்கிய காரணமாகும். ரஷ்யா இப்போது, இந்த திட்டத்தை கைவிடுவது மிகவும் மோசமான ஒரு முடிவாக இருக்கும்" என்று போரிசோவ் தெரிவித்தார்.

லூனா-25 எடுத்த புகைப்படம்:

லூனா-25 விண்கலம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19ஆம் தேதியே நிலவில் விழுந்து நொறுங்கிவிட்டது. முன்னதாக லூனா-25 விண்கலம், நிலவின் தென் துருவத்தைப் புகைப்படம் எடுத்தது. இந்த புகைப்படத்தை ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

லூனா-25 விண்கலத்தின் நோக்கம்?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவில் கால்பதித்தாலும், அதன் தென் துருவத்திற்கு இதுவரை யாரும் சென்றதில்லை. நிலவின் தென் துருவத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நீர் உள்ளிட்ட பிற இயற்கை வளங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகவே லூனா-25 விண்கலத்தை ரஷ்யா ஏவியது. விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டம் அதிபர் புதினிற்கு மிகவும் விருப்பமான திட்டமாகும்.

ரோஸ்கோஸ்மோஸில் லூனா-25 லேண்டர்
ரோஸ்கோஸ்மோஸில் லூனா-25 லேண்டர்

ரஷ்யாவின் தொழில்நுட்ப பின்னடைவுக்கு காரணம் என்ன?

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த பொருளாதாரத் தடைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்பங்களை பெறுவதில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப பின்னடைவு ரஷ்யாவின் விண்வெளித் திட்டத்தை பாதித்துள்ளதாக தெரிகிறது. லூனா-25 விண்கலத்துடன் ஒரு சிறிய ரோவரை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டது. ஆனால், விண்கலத்தின் எடை அதிகமாகும் என்பதால் அந்த முடிவை கைவிட்டது.

லூனா-25 எடுத்த நிலவின் தென் துருவப் புகைப்படம்
லூனா-25 எடுத்த நிலவின் தென் துருவப் புகைப்படம்

தென் துருவம் ஏன்?

நிலவின் தென் துருவம் தற்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென் துருவத்தின் பள்ளங்களில், பாறைகளில் உறைந்த நீர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நீரின் பயன்பாடுகள் அதிகம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நீர், எரிவாயுவாகவும், ராக்கெட் எரிபொருளாகவும் மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!

Last Updated :Aug 23, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.