ETV Bharat / international

சீனாவில் லட்சக்கணக்கில் கரோனா பாதிப்புகள் - திணறும் மருத்துவமனைகள்!

author img

By

Published : Dec 25, 2022, 6:07 PM IST

Surge
Surge

சீனாவில் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால், மருத்துவமனைகள் நிரம்பி பணிசெய்ய முடியாமல் மருத்துவ ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

பெய்ஜிங்: சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி, 'ஜீரோ கோவிட்' கொள்கையை சீனா நீக்கியதன் காரணமாகவே கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த வாரம் முதம் நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதேநேரம் உண்மையான கரோனா பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ நகரில் நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக 'என்ஹெச்கே வேர்ல்டு' என்ற ஜப்பானிய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கிங்டாவோ நகரில் பல ஜப்பானிய நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி அன்று, கிங்டாவோ நகரில் சுமார் 5.3 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சீனாவின் உற்பத்தி மையமாக கருதப்படும் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்குவான் நகரில் தினசரி பாதிப்பு இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெய்ஜிங், டோங்குவான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பெய்ஜிங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. நோயாளிகளை சமாளிக்க முடியாமல் சுகாதார ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து பெய்ஜிங் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தினமும் சுமார் 500 நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர். இது வழக்கத்தை விட 2.5 மடங்கு அதிகம். அவர்களில் 20 சதவீதம் பேருக்கு தீவிரமான அறிகுறிகள் உள்ளன.

நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெய்ஜிங்கில் உள்ள பல மருத்துவமனைகள் தற்காலிகமாக ஐசியு வார்டுகளை அமைத்து, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.