ETV Bharat / state

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழா.. மதுரையை மணக்க வைத்த மட்டன் விருந்து! - Karumparai Kari Virunthu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:29 PM IST

Updated : May 18, 2024, 7:58 PM IST

Karumparai Muthiah Temple Festival: மதுரை அருகே உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Karumparai Muthiah Temple Festival
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து தொடர்பான வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள்கோவில்பட்டி பகுதியில், பழமை வாய்ந்த ஸ்ரீ கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சாமிக்கு உருவம் கிடையாது, அங்குள்ள பாறையை பக்தர்கள் முத்தையா சாமியாக வழிபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் கறுப்பு நிற ஆடுகளை வைத்து, நள்ளிரவில் பலியிட்டு ஆண்கள் மட்டுமே சமைத்து, அதிகாலை சாமிக்கு படைத்து பூஜை செய்கின்றனர். அதன் பிறகு, கோயிலின் அருகே உள்ள பொட்டல் தரையில் அங்கு கூடும் ஆண் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகக் குழுவினர் கறி விருந்து அளிக்கின்றனர்.

அந்த வகையில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கரும்பாறை முத்தையா கோயிலின் கறி விருந்து திருவிழா இன்று (மே 18) நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு, 2,000 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட நிலையில், சுமார் 10,000 ஆண்கள் இந்த கறி விருந்தில் கலந்துகொண்டனர்.

இதில் எவ்வித சாதிமத பேதமின்றி, அனைவரும் சமநிலையில் மண் தரையில் அமர்ந்து கறி விருந்தை உண்டு மகிழ்ந்த பின்பு, சாப்பிட்ட இலையை அதே இடத்தில் விட்டுச் செல்வர். நாளடைவில் அந்த இலைகள் மாயமாகி விடும் என்பது ஐதிகம்.

இவ்விழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. விழா துவங்கிய 3 நாட்களுக்கு பெண்கள் எவரும் அப்பகுதிக்கு வருவதில்லை. திருமங்கலம், உசிலம்பட்டி , மதுரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் ஒன்றுகூடுவர்.

முன்னதாக, சாமியிடம் நினைத்த காரியம், அதாவது, குழந்தை வரம் வேண்டியும், அரசு வேலை மற்றும் பணி உயர்வு வேண்டியும், உடல் நலம் வேண்டியும் கறுப்பு நிற ஆட்டுக் குட்டியை கோயிலில் விட்டுச் செல்வர். அந்த ஆடுகள் அப்பகுதியில் மேய்ந்து பெரிய ஆடுகளாக உருமாறிய பின்பு, கரும்பாறை முத்தையா சாமிக்கு பலியிடுவது வழக்கம். இந்த வழக்கமே, தற்போதுவரை தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 15-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

Last Updated : May 18, 2024, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.