ETV Bharat / international

இந்தியாவில் ஜி 20 மாநாடு..! வடகொரியாவில் ரஷ்யா - சீனா பிரதிநிதிகள் பங்கேற்கும் துணை ராணுவ அணிவகுப்பு! என்ன நடக்குது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 2:01 PM IST

இந்தியாவில் ஜி 20 மாநாடு - வடகொரியாவில் ரஷ்யா - சீனா பிரதிநிதிகள் பங்கேற்கும் துணை ராணுவ அணிவகுப்பு!
இந்தியாவில் ஜி 20 மாநாடு - வடகொரியாவில் ரஷ்யா - சீனா பிரதிநிதிகள் பங்கேற்கும் துணை ராணுவ அணிவகுப்பு!

North Korea hosts Chinese-Russian guests at paramilitary parade: இந்தியா தலைமையில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், வடகொரியா, சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு துணை ராணுவ அணிவகுப்பை நடத்தி உள்ள சம்பவம், உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சியோல்: வட கொரியா நாட்டின் 75வது நிறுவன தின கொண்டாட்டங்கள், செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் உற்சாகமாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் பியாங்யாங்கில், பிரமாண்ட துணை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் சீன நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய நாட்டின் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு, பல சர்வதேச நாடுகளின் கவனத்தை, வடகொரியா பக்கம் திருப்பி உள்ளது. அமெரிக்கா உடன் வடகொரியா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், வடகொரியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உடன் நட்பு பாராட்டி வருவது, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், விரைவில் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அங்கு அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக, வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ரஷ்ய - உக்ரைன் போர் நிகழ்வினால், ரஷ்ய படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தம், இந்த சந்திப்பில் மேற்கொள்ளப்படலாம், என்று அந்த ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

வடகொரிய நாட்டின் நிறுவன தின கொண்டாட்டத்திற்கு, சீனா, அதன் துணை பிரதமர் லியூ குவோஜோங் தலைமையில் பிரதிநிதிகள் குழுவை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. கிம் - புதின் சந்திப்பு விரைவில் நிகழ உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தெரிவித்து உள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, வடகொரியா இன்னும் வெளியிடவில்லை.

இந்த சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்கா நம்புவதால், இந்த விவகாரத்தில், அமெரிக்கா ஏதேனும் இடையூறை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால, இந்த சந்திப்பு, மூடிய அறை சந்திப்பாக நிகழ வாய்ப்பு இருப்பதாக, வடகொரியா நாட்டின் உளவு அமைப்பு தெரிவித்து உள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவின் காரணமாகவே, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை புறக்கணித்து உள்ளதாக, அந்த உளவு அமைப்பு மேலும் குறிப்பிட்டு உள்ளது.

வட கொரியா நாட்டின் நிறுவன தினத்தை ஒட்டி, சீன மற்றும் ரஷ்ய நாடுகளின் தலைவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்துக் கடிதத்தில், தாங்கள் சார்ந்த பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்று இருக்க, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் அதிபர்கள், தாங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல், தங்களது பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, எதிரிக்கு எதிரி நண்பன் என்பதன் அடிப்படையில், வடகொரிய நாட்டுடன் நட்பு பாராட்டி வருவது, சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல....

இதையும் படிங்க: Morocco Earthquake : மொராக்கோ நிலநடுக்கம் - பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.