இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் ஜூன் 25 முதல் சமீபத்திய பருவமழையால் 86 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 151 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக வெளியான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, இதுவரை 86 உயிரிழந்துள்ளனர் மற்றும் 151 காயமடைந்துள்ளனர் என்று பதிவாகியுள்ளது. இதில் 16 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் உள்ளனர். நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் 97 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு 52 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப்பில்தான் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கைபர் பக்துன்க்வாவில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலுசிஸ்தானில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் ஏற்பட 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.
பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டிக்கு (Public Accounts Committee) அளித்த விளக்கத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இனாம் ஹைதர், "வெப்பநிலையின் விரைவான அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல் மற்றும் பருவமழையின் ஆரம்பம் ஆகியவை வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பாகிஸ்தானின் காலநிலை மாற்ற அமைச்சகம் 17 செயற்கைக்கோள்களை கண்காணித்து வருகிறது. 36 வெள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போல தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாகிஸ்தானில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் முழுவதும் பெய்து வரும் மழையின்போது லாகூரில் உள்ள அசார் டவுன் மற்றும் ஷாஹ்தாரா டவுன் சுற்றுப்புறங்களில் உள்ள இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், குறிப்பிடத்தக்க காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது. பஞ்சாப்பின் நிவாரண ஆணையர் நபீல் ஜாவேத், மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (Provincial Disaster Management Authority) கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்றார். அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: El Nino: கொதிக்கும் உலகம்; வெப்பநோய்களிலிருந்து தப்புவது எப்படி? 'எல் நினோ' விளைவு என்றால் என்ன?