ETV Bharat / international

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் புதிய குழுவினை அறிவித்த ஜோ பைடன்

author img

By

Published : Dec 20, 2020, 12:45 PM IST

Updated : Dec 20, 2020, 1:02 PM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன்

அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதிய குழுவின் உறுப்பினர்களை அந்நாட்டு அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன், மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 'பருவநிலை மற்றும் ஆற்றல்' எனும் புதிய குழு ஒன்றினை அமைத்து, அதன் உறுப்பினர்களை ஜோ பைடன் நேற்று (டிச.19) அறிவித்தார். இந்தக் குழுவின் தலைவராக வடக்கு கரோலினா சுற்றுச்சூழல் துறை தலைவர் மைக்கல் ரேகன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரை செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பருவநிலை மற்றும் ஆற்றல் குழுவின் முதல் கறுப்பினத் தலைவர் என்ற பெருமையை மைக்கல் ரேகன் பெறுவார். தவிர, சுற்றுச்சூழல் வழக்குரைஞர் பிரெண்டா மலோரியை வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தரக் கவுன்சிலின் தலைவராக பைடன் பரிந்துரைத்துள்ளார்.

அதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் முன்னாள் தலைவர் கினா மக்கார்த்தியைத் தேசிய பருவநிலை ஆலோசகராகவும், பாகிஸ்தான்-அமெரிக்கரான அலி சைதியை தேசியத் துணை பருவநிலை ஆலோசகராவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் தொடர்பாகப் பேசிய அவர், "கரோனா பரவலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்தது செயல்படுவது போல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவசரகால நிலையின்போது செயல்பட்டது போன்று பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

அமெரிக்காவில் 2035ஆம் ஆண்டுக்குள் தொழிற்சாலைகளின் கார்பன் உமிழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆற்றல் திட்டங்களை ஏற்படுத்துவதை இலக்காக தாங்கள் கொண்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைத் தடுக்க மக்கள் அனைவரும் எலக்ட்ரானிக் வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

பருவநிலை குழு தொடர்பாக பேசிய அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், "நாட்டின் மிகவும் திறன் கொண்ட, சுற்றுச்சூழல் மீது அதிகம் ஆர்வம் கொண்ட பொது சேவகர்கள், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பருவநிலை மாற்றம் என்பது அனைவருக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குறிப்பாக காற்று மாசுப்படுதல், நீர் மாசுபடுதல் மூலம் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நேரடி ஒளிபரப்பில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

Last Updated :Dec 20, 2020, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.