ETV Bharat / entertainment

அரசியலிலும் வாரிசு வேண்டும்... நடிகர் ராதாரவி பஞ்ச்

author img

By

Published : Aug 18, 2022, 3:51 PM IST

’அரசியலிலும் வாரிசு வேண்டும்..!’ - நடிகர் ராதாரவி!
’அரசியலிலும் வாரிசு வேண்டும்..!’ - நடிகர் ராதாரவி!

நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா நடித்திருக்கும் கொடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(ஆக 17) நடைபெற்றது.

இயக்குநர் ராஜ செல்வம் இயக்கியுள்ள 'கொடை' படத்தின்‌ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிங்கமுத்துவின் மகனும் இப்படத்தின் நாயகனுமான கார்த்திக் சிங்கா, நாயகி அன்யா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், இயக்குநர் எழில், அம்மா டி.சிவா, தயாரிப்பாளர் கே.ராஜன், ராதாரவி, சிங்கமுத்து, இசை அமைப்பாளர் சுபாஷ் கவி, அஜய் ரத்னம், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் ராதாரவி, “தற்போது தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது. நான் ஓடிடிக்கு எதிரானவன் இல்லை. உண்மையை சொல்கிறேன். அரசியலிலும் வாரிசு வேண்டும். தமிழ் நாயகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பழைய வரலாறுகளைப் பற்றி பேசுவதில் ஒரு பயனும் இல்லை. இன்றைய நிலையை யோசித்துப்பாருங்கள்” எனப் பேசினார்.

மேலும் ’கொடை’ படத்தின் நாயகனான நடிகர் கார்த்திக் சிங்கா பேசுகையில், “இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம்மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது.

இந்தப் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய உதவி செய்தனர்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி” எனப் பேசினார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து ஆதரவளியுங்கள். நன்றி” என்றார்.

’அரசியலிலும் வாரிசு வேண்டும்..!’ - நடிகர் ராதாரவி!

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், “படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது. இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை. படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

இயக்குநருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

5 பாடல்கள் கொண்ட இந்தப் படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது.

இதையும் படிங்க: வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்... ரசிகர்கள் கொண்டாட்டம்




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.