ETV Bharat / city

சுதந்திரப்போராட்டத்தின் நம்பிக்கை விதை வீரபாண்டிய கட்டபொம்மன்

author img

By

Published : Aug 14, 2022, 7:46 PM IST

d
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் தங்களது ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆங்கிலேய வணிகம் கட்டபொம்மனின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனது வணிகத்தினை தொடங்க நினைத்த போது, தனது துணிச்சலால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றார். இந்த 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, மாவீரன் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது இந்த தொகுப்பு....

தமிழ்நாட்டில் உள்ள இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது, பாஞ்சாலங்குறிச்சி. அந்த ஊரில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன் இது இரண்டும் மருவி வீரபாண்டிய கட்டபொம்மன் என்றானது.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பு...

கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின்பேரில், அவர் தனது இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்தார்.

பிறகு அவர் இளைய வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது.

தனது 30ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார், கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏறினார். இதற்குக்காரணம் அவர் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான். இவையிரண்டை வைத்தே அவர் பாளையக்காரர் அரியாசனத்தில் அரியணை ஏறினார்.

ஆங்கிலேயர்கள் இங்கிருந்த ராஜ்ஜியங்களில் தொடர்ந்து வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பல ராஜ்ஜிய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருந்தது. தன் ராஜ்ஜியத்தில் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டும் அளவிற்குப் பணம் இல்லை என்பதனால் அவன் மக்களிடம் பணம் வசூலித்தான். அப்போது அந்தப்பகுதியில் வாழும் மக்கள் அவனை வசைபாடத் தொடங்கினர்.

மக்கள் தன்னை வசைபாடுவதை கண்டு மனம் நொந்து இருந்த நேரத்தில் ஜாக்சன் துரை அவனிடம் பணத்தினை வசூலிக்க வந்தான். அப்போது கோபத்தின் மிகுதியில் இருந்த கட்டபொம்மன் ஜாக்சன் துரையை நோக்கி, ''யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி” என்று துணிச்சலாக அவரின் முகத்தின் எதிரே தனது வீரத்தினை வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று கூறி அவனை வெளியே அனுப்பினார்.

ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு, அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. இவனை வீழ்த்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அவர் மீது போர் தொடுக்கத் தயாரானார்கள். இதனை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தார். போரில் கடுமையாக சண்டையிட்டும் ஆங்கிலேயர்களால் அவரது ராஜ்ஜியம் கவரப்பட்டது.

போரில் தனது ராஜ்யத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுக்காக பயந்து அந்த மன்னன் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்தனர்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளி என்று ஆங்கிலேயர்கள் பழி சுமத்தினர். கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ மறுக்கவும் இல்லை. உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளையர்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார், வீரபாண்டிய கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறியபோதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்’’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார், கட்டபொம்மன். கயத்தாறு எனும் பகுதியில் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

இதையும் படிங்க: சென்னை ஜார்ஜ் கோட்டையும்... முதல்முதலாக பறந்த தேசியக் கொடியும்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.