நெல்லையப்பர் கோயிலில் 'நெல்லைக் காத்த திருவிளையாடல்' நிகழ்ச்சி

author img

By

Published : Jan 13, 2022, 6:34 AM IST

நெல்லையப்பர்
நெல்லையப்பர் ()

திருநெல்வேலி பெயர் காரண திருவிழாவான, வேதபட்டருக்காக சிவபெருமான் 'நெல்லை' மழையிலிருந்து வேலியிட்டு காத்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூசத் திருவிழா ஜனவரி 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 4ஆம் நாளான திருநெல்வேலி என்ற பெயர் காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

நெல்லை காத்த 'நெல்லையப்பர் சுவாமி'

சிவ பக்தரான வேதபட்டர் என்பவர், நெல்லையப்பருக்கு அமுது படைக்க நெல்லை உலரவைத்து விட்டுக் குளிக்கச் சென்ற போது பெய்த மழையில் நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமி நெல்லையப்பரிடம் வேண்டியுள்ளார்.

இந்நிலையில் சுவாமி நெல்லையப்பர் நெல் உலர்த்தப்பட்ட இடத்தில் மட்டும் மழை பெய்யாதவாறு வேலியிட்டு காத்தருளியதனால் 'திருநெல்வேலி' என இந்த ஊர் பெயர் பெற்றது.

திருவிளையாடல் நிகழ்ச்சி

இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவின் 4ஆம் நாளான நேற்று சுவாமி சன்னதி மண்டபத்தில் நடைபெற்றது.

மர சப்பரத்தில் எழுந்தருளிய வேத பட்டர் நெல்மணிகளை யாசகம் பெற்று சுவாமிக்கு அமுது படைக்க கோவில் மண்டபத்தில் ஈரம் காய உலர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வேதபட்டர் கோயில் பொற்றாமரை குளத்தில் குளிக்க சென்றபோது பெய்த மழையிலிருந்து நெல்மணிகள் வேலியிட்டது போல, நெல் உலர்த்திய இடத்தில் மட்டும் மழை பெய்ய்தாவாறு காத்தருளிய திருவிளையாடல் நிகழ்ச்சியும் பதிகம் பாடல் பாடி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

'நெல்லை’ மழையிலிருந்து வேலியிட்டு காத்த திருவிளையாடல் நிகழ்ச்சி

மகா தீபாராதனை

இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஈராயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர் திருவிழா ஜல்லிக்கட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.