ETV Bharat / city

தென் தமிழ்நாட்டில் கால் வைக்கும்போது உணர்ச்சிப் பெருக்கை உணர முடிகிறது - ஆளுநர் ரவி

author img

By

Published : Dec 15, 2021, 4:39 PM IST

மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநர்
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநர்

தென் தமிழ்நாட்டில் கால் வைக்கும்போது உணர்ச்சிப் பெருக்கை உணர முடிகிறது; பாரதியார் கவிதைகளைக் கேட்டேன் என மனோன்மணியம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 28ஆவது பட்டமளிப்பு விழா இன்று (டிசம்பர் 15) காலை பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, ஆயிரத்து 374 பேருக்கு நேரடியாகப் பட்டங்களை வழங்கினார்.

இதில் 204 பேர் தங்கப் பதக்கங்கள் பெற்றனர். கடந்தாண்டு கரோனா பாதிப்பு காரணமாகப் பட்டமளிப்பு விழா நடக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து பட்டம் பெற தகுதியுடைய மொத்த நபர்கள் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 527 பேர் பட்டம் பெற்றனர்.

முன்னதாக திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவு பல்கலைகழகத்தின் இயக்குநர் அஜயகோஷ் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திப் பேசுகையில், “தேசிய வளர்ச்சிக்காகவும், நமது மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் சமுதாயத்திலிருந்து வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.

கல்வியின் நோக்கம் அனைவருக்கும் அறிவுசார் அதிகாரம் பெற சம வாய்ப்புகளை வழங்குவதே ஆகும். அறிவியலும் தொழில்நுட்பமும், நாட்டின் வளர்ச்சி - முன்னேற்றத்திற்கு உதவினாலும், அது இயற்கையையும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கக்கூடிய வகையில் அமையக் கூடாது, அழிக்கவும் கூடாது.

நமது கல்வி, அறிவியல் மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை நன்கு பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. காற்றையும் நீரையும் தூய்மையாகப் பாதுகாத்து, நமக்குக் கிடைக்கும் ஆற்றலையும் வளங்களையும் சிக்கனமாகப் பயன்படுத்தி, இயற்கை அன்னையைப் பாதுகாக்கும் பொறுப்பை இளம் தலைமுறையினர் ஏற்க வேண்டும்.

வரும் தலைமுறைக்கு அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. சுத்தமான குடிநீர், மதிப்புக் கூட்டுதல், உணவைப் பாதுகாத்தல், காற்று மாசுபடாமல் தடுத்தல், நெகிழிக்கு மாற்றாக மரபுசாரா ஆற்றலை உருவாக்குதல், தூய்மையான சூழலைப் பேணுதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும். வேலையைத் தேடுவதைவிட வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்வித் துறை சிறப்பாக உள்ளது” என்றார்.

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

இதனைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “நாடு முழுவதும் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 21.4 விழுக்காடாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 41.4 விழுக்காடு என உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். புதிதாகக் கல்விக் கொள்கையை வகுக்க கல்விக்கான வல்லுநர் குழுவை அமைத்து அதற்கான பணிகளை அரசு செய்துவருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில் பன்னாட்டுக் கல்விக்கு இணையாகக் கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

எந்த மொழி மீதும் நமக்கு வெறுப்பு இல்லை. தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலையில்லாமல் மற்றவர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும். தமிழ் தெரிந்தவர்கள் அரசுப் பதவிகளில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் பாட தேர்வு வைக்கப்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இருமொழிக் கொள்கைதான் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சருடைய விருப்பம்” என்றார்.

உணர்ச்சிப்பூர்வமான பாரதியார் கவிதைகள்

தொடர்ந்து ஆர்.என். ரவி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றுகையில், “தென் தமிழ்நாட்டில் கால்பதித்தவுடன் உணர்ச்சிப்பெருக்கை உணர முடிந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல கவிதைகளை நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் பாடியுள்ளார். அவரது பாடல்களைத் தமிழில் படித்தால்தான் உணர்ச்சிப்பூர்வமாக முழுமையாக அதனைப் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பாடல்கள் ஆங்கிலத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநர்
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநர்

இந்த மண் வ.உ. சிதம்பரனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், செண்பகராமன் பிள்ளை ஆகிய புகழ்பெற்ற தலைவர்களை நாட்டிற்குத் தந்துள்ளது. இளைஞர்கள் பட்டம் பெற்றோர் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

அதனை அடையும்வரை தொடர்ந்து போராட வேண்டும். புதிய கல்விக் கொள்கை ஒருங்கிணைந்த வளர்ச்சியை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான ஆய்வுகள், அதன்மூலமான கண்டுபிடிப்புகள்தான் தேசிய கல்விக் கொள்கை 2020இன் சாராம்சம்.

மாணவர்களின் எதிர்காலப் பார்வை உயர்வாக இருக்க வேண்டும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பட்டதாரிகளை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. புதிய கல்விக் கொள்கைகள் மூலம் பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து பகுத்துணர்ந்து புதிய ஆராய்ச்சிகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.