ETV Bharat / city

'முன்பு போலவே முனியப்பனுக்கு வழிபாடு நடத்திட அரசு உதவிட வேண்டும்' - பக்தர்கள் கோரிக்கை!

author img

By

Published : Aug 7, 2022, 5:43 PM IST

Updated : Aug 7, 2022, 6:24 PM IST

தலை வெட்டி முனியப்பன் கோயிலாகவே இருக்க வேண்டும்
தலை வெட்டி முனியப்பன் கோயிலாகவே இருக்க வேண்டும்

தலை வெட்டி முனியப்பன் சிலையா அல்லது புத்தர் சிலையா என்ற விவகாரத்தில், புத்தர் சிலை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அதை முனியப்பன் கோயிலாகவே தொடர வேண்டும் என பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரில் அமைந்துள்ள தலைவெட்டி முனியப்பன் கோயிலில் உள்ள சிலை முனியப்பன் அல்ல; அது புத்தர் சிலை தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தலைமுறை தலைமுறையாக தலைவெட்டி முனியப்பன் கோயிலில் பூஜை பணிகள் செய்து வரும் பூசாரிகள் மற்றும் வழிபாடு செய்து வரும் பக்தர்கள், தொடர்ந்து அங்கு முனியப்பனுக்கு வழிபாடு நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகர கோட்டைப்பகுதியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது தலைவெட்டி முனியப்பன் கோயில். அரசு பதிவேட்டில் இந்தப்பகுதி பெரியேரி கிராம எல்லைக்குள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முனியப்பன் கோயில் உள்ளது. அந்தக்கோயில்களில் உள்ள முனியப்பன் சாமி சிலைகள், போர்க் கோலம் கொண்ட தோற்றத்தில் இருக்கும்.

ஆனால், இந்த தலைவெட்டி முனியப்பன் கோயிலில் உள்ள சாமி திருவுருவச்சிலை சாந்தமான தோற்றத்தில், அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாமி சிலையின் தலை இடதுபுறம் சாய்ந்த நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிலையின் கைகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதும், தனித்துவம் வாய்ந்த முனியப்பனாக கருதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சைவ திருத்தலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுவதைப்போல, தலைவெட்டி முனியப்பன் கோயிலிலும் திருநீறு மற்றும் குங்குமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தில் அறநிலையத்துறைக்குச்சொந்தமான நிலத்தில், தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலையாகும். இதுதொடர்பாக கடந்த 2008-இல் சர்ச்சை எழுந்தது. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது.

சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச்சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, அறநிலையத்துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா, புத்தர் சிலையா என ஆய்வு செய்து, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ' தலைவெட்டி முனியப்பன் கோயில் கட்டடம் நவீனத்தோற்றம் உடையது.

அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், ’தியான முத்ரா’ கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலைப்பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்றுச்சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்’ எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில் 'தலைவெட்டி முனியப்பன் சிலை’ எனக்கருதி பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். எனவே, அறநிலையத்துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப்பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.

'முன்பு போலவே முனியப்பனுக்கு வழிபாடு நடத்திட அரசு உதவிட வேண்டும்' - பக்தர்கள் கோரிக்கை!

அந்த உத்தரவில் , 'பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தலைவெட்டி முனியப்பன் சிலை என்பதை அறநிலையத்துறை கருத அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என்று அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். அதேவேளையில், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக தலை வெட்டி முனியப்பனை வணங்கி வரும் பக்தர்களும் முனியப்பனுக்கு பூஜைகள் செய்து வரும் பூசாரிகளும் முன்பு போலவே முனியப்பனுக்கு வழிபாடு நடத்திட தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட அறநிலையத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'நாளை(ஆக.08) சென்னையில் உள்ள எங்களது துறை சார்ந்த உயர் அலுவலர்களின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல உள்ளோம். நீண்ட ஆண்டுகளாக தலைவெட்டி முனியப்பனை வணங்கி வரும் பக்தர்களின் மனம் புண்படாத வகையில் அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்ய செய்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் வீட்டை தவிர மற்றவர்களின் வீடுகளை அகற்றியதாக குற்றச்சாட்டு - பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தால் பரபரப்பு

Last Updated :Aug 7, 2022, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.