ETV Bharat / city

உசிலம்பட்டி 58 கிராம திட்ட கால்வாய்க்கு நீர் திறப்பு

author img

By

Published : Nov 13, 2021, 4:33 PM IST

உசிலம்பட்டி 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
உசிலம்பட்டி 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

முதலமைச்சரின் உத்தரவின்பேரில் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம திட்ட கால்வாய்க்கு இன்று (நவ. 13) நீர் திறந்துவிடப்பட்டது.

மதுரை: வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம திட்டக் கால்வாய்க்கு நீர் திறந்துவிட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் முன்னிலையில் 58 கிராம திட்ட கால்வாய்க்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
58 கிராம திட்ட கால்வாய்க்கு நீர் திறப்பு

முதலமைச்சர் உத்தரவின்பேரில் நீர் திறப்பு

இந்நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆயிரத்து 912 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும் 58 கிராம திட்டக் கால்வாய் நீர் மூலம் பயன்பெறுகின்றன.

மலர் தூவி தண்ணீர் திறப்பு
மலர்த்தூவி நீர் திறப்பு

பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் உறுதியளித்ததன் அடிப்படையில் இன்று (நவ. 13) நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிலங்களைச் சார்ந்து வாழும் உழவர் பயனடைவர்” என்றார்.

கால்வாய் பயன்கள்

58 கிராம திட்டக் கால்வாய் மூலம் தற்போது விநாடிக்கு 150 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலுள்ள இரண்டாயிரத்து 285 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். 86.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் 1999 ஜூலை 19ஆம் நாள் தொடங்கப்பட்டு 2018 மார்ச் 31ஆம் நாள் நிறைவுபெற்றது.

நீர் திறந்துவைத்த பிடிஆர்

27.84 கி.மீ. நீளமுள்ள இந்தக் கால்வாயிலிருந்து பிரிந்துசெல்லும் கிளைக்கால்வாயின் நீளம் 22.17 கி.மீ. ஆக உள்ளது. இதற்காக உசிலம்பட்டி வட்டத்தில் அமைக்கப்பட்ட தொட்டிப்பாலத்தின் நீளம் இரண்டாயிரத்து 650 மீட்டராகும். இதன் மூலம் 35 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. சராசரியாக விநாடிக்கு 316 கன அடி நீர் செல்லும் வகையில் இக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை பெருவெள்ளம்: மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.