ETV Bharat / city

தத்தனேரி பாலத்தில் ரயில் மறியல் ஞாபகம் இருக்கா?- ஜல்லிக்கட்டு போராளிகள் விடுதலை

author img

By

Published : Apr 19, 2022, 7:53 PM IST

ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் விடுதலை
ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் விடுதலை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 2017ஆம் ஆண்டு மதுரை தத்தனேரி ரயில் பாலத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: பீட்டா என்ற விலங்கு நல அமைப்பு கோரியதன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, மதுரை தத்தனேரி எல்ஜசி ரயில்வே பாலத்தில் அமர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகை ஆற்றின் நடுவே தண்டவாளத்தில் அமர்ந்து நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சரியாக பிற்பகல் 2.25 மணிக்கு நாகர்கோவில் பாஸஞ்சர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். காவல் துறை தரப்பில் போராட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் விடுதலை
ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் விடுதலை

இதன் காரணமாக நடைபெற்ற கலவரத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல் துறை 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட குற்றவியல் 4ஆவது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு இன்று(ஏப். 19) விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 'மலைப்பகுதி டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும் : உயர் நீதிமன்றம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.