ETV Bharat / city

'டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும்' -மத்திய கல்வி அமைச்சர் பதில்

author img

By

Published : Mar 18, 2022, 8:03 AM IST

சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று சு.வெங்கடேசன் எம்பி எழுதிய கடிதத்திற்கு மத்திய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்துள்ளார்.

மதுரை: டெல்லி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பதவிக்கான இடங்களை நிரப்புவது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதுதொடர்பாக ு மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து 21.12.2021 அன்று மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு மத்திய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் 11.03.2022 தேதியிட்ட கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளார்.

தனி சட்டம்

டெல்லி பல்கலைக் கழகம் நாடாளுமன்ற தனி சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. டெல்லி பல்கலைக் கழக சட்டம் 1922 மற்றும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட (அ) அவசர சட்ட நியதிகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்பு. அதன் முடிவுகள் அதன் செயற்குழு (அ) கல்விக் குழு (அ) மன்றம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எனது கடிதம் டெல்லி பல்கலைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், அதன் இந்திய நவீன மொழிகள் மற்றும் இலக்கிய கல்வித் துறையில் தமிழ் சார் காலியிடங்கள் கீழ்க் கண்ட எண்ணிக்கையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்

உதவிப் பேராசிரியர் - தமிழ் - 1 ( பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் - EWS), இணைப் பேராசிரியர் - தமிழ் 1 ( பட்டியல் சாதி - SC) 1 (பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் - EWS), 1 ( இதர பிற்பட்ட பிரிவினர் - OBC) ஆகிய காலியிடங்கள் உள்ளன. மேலும் தயாள் சிங் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது; இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை டெல்லி பல்கலைக் கழகம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். பதிலளித்த அமைச்சருக்கு நன்றி. தலைநகரில் தமிழ்க் கல்வி தடையின்றி கிடைக்கட்டும்.

டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு உரிய இடம் இருக்க வேண்டும், தொடர வேண்டும் என்ற எனது முயற்சிக்குக் கிட்டியுள்ள நல்ல பதில். முன்னேற்றம். வெற்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022: கல்விக்கான எதிர்பார்ப்பு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.