ETV Bharat / city

யானைகள் கண்காணிப்பு பணி: வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

author img

By

Published : May 1, 2022, 9:26 AM IST

ரயில் தண்டவாளத்தில் யானை கண்காணிப்பு பணி சிறப்பு செய்தி தொகுப்பு
ரயில் தண்டவாளத்தில் யானை கண்காணிப்பு பணி சிறப்பு செய்தி தொகுப்பு

கோவையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் காட்டு யானைகளை கண்காணித்து, காட்டுக்குள் விரட்ட 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் ரோந்து செல்லும்போது வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

கோவை: பாலக்காட்டுக் கணவாயில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வழித்தடத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கோவை மதுக்கரை முதல் கேரளா பாலக்காடு வரை சுமார் 24 கிலோமீட்டர் தொலைவுக்கு வனத்தை ஒட்டி இருக்கும் ரயில்வே தண்டவாளங்கள் யானைகளுக்கு எமனாக மாறி உயிரைப் பறித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக 2002 முதல் தற்போதுவரை, 19 ஆண்டுகளில் 29 யானைகள் இந்த வழித்தடத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த ஆண்டு நவக்கரை அருகே மங்களூரு - சென்னை விரைவு ரயில் மோதி கருவுற்றிருந்த பெண் யானை உள்பட மூன்று யானைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரோந்து பணி: மரப்பாலம் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ஏ மற்றும் பி லைன் தண்டவாளங்களில் ஓட்டுநர்கள் குறைந்த அளவிலான வேகத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த அதேவேளை, யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தண்டவாளங்களை கடக்கும் யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வனச்சரகர் அறிவுறுத்தலின் பேரில் ஏழு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் கையில் டார்ச் லைட் உடன் ஏ மற்றும் பி லைன் தண்டவாளங்களில் ரோந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர்.

ரயில் தண்டவாளத்தில் யானை கண்காணிப்பு பணி சிறப்பு செய்தி தொகுப்பு

யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தாலோ அல்லது தண்டவாளம் அருகிலிருந்தாலோ சப்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிப்போம் என கூறும் வனவர் கருணாநிதி, முரண்டு பிடிக்கும் யானைகளை தவிர்க்க இயலாத சூழலில் பட்டாசு வைத்து வனப்பகுதிக்குள் விரட்டுவதாக தெரிவிக்கிறார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு குழுவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றொரு குழுவும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

யானைகள் நடமாட்டம்: வனப்பகுதியை ஒட்டி இருக்கும் ரயில்வே தண்டவாளங்களில் அதிகபட்சமாக 12 மணி நேரத்தில் மூன்று முறை ரோந்து செல்ல நேரிடும் என்றும், யானைகள் தண்டவாளங்களை கடப்பதை பார்த்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ, ரயில்களை மிகுந்த கவனத்துடன் ஒலி எழுப்பியவாறு குறைந்த வேகத்தில் செல்ல வாளையார் ரயில் நிலையத்துக்கு வேட்டை தடுப்பு காவலர்கள் தகவல் அளிப்பார்கள் என்றும் கூறினார்.

அதேபோல ரயில் ஓட்டுநர்களும் தண்டவாளங்களுக்கு அருகில் யானைகள் நடமாட்டத்தை பார்த்தால் வாளையார் ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்து தங்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என்ற வனவர் கருணாநிதி, இதன் மூலம் பெரும் அசம்பாவிதங்களை எளிதாக தவிர்க்க முடிவதாக கூறினார்.

பணியை விருப்பமுடன் செய்யும் காவலர்: யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை பாதுகாக்கும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக கூறும் வேட்டைத் தடுப்பு காவலர் கருப்புசாமி, பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் ரயில் தண்டவாளங்களில் ரோந்து செல்லும் பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டதாகவும், கடந்த ஆண்டு நவக்கரை அருகே மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் தங்களை வெகுவாக பாதித்தது.

இதனைத் தொடர்ந்து இனிமேல் எந்தவொரு யானையும் ரயிலில் அடிபட்டு உயிரிழக்காத வகையில், தண்டவாள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ரயில் வரும்போது ஒதுங்க கூட இடமில்லாத இடங்களில் கூட யானையை கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், "ரயில் அருகே வரும்போது யானை தண்டவாளத்தை திடீரென கடந்தால் என்ஜினை நோக்கி மேலும் கீழுமாக டார்ச் அடித்து ஓட்டுநரின் கவனத்தைப் பெறமுடியும் என்றும் அதன் மூலம் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முடியும் எனக் கூறும் வேட்டைத் தடுப்பு காவலர் கருப்பசாமி, யானைகள் இருந்தால்தான் காடு வளமாக இருக்கும், மக்களும் நலமுடன் இருக்க முடியும். யானை கண்காணிக்கும் இந்த பணியை விருப்பப்பட்டு செய்துவருகிறேன் என்றவர் டார்ச் லைட் அடித்தபடி தண்டவாள பகுதியில் யானையை கண்காணிக்கும் பணியை தொடர்ந்தார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.