ETV Bharat / city

சக்திவாய்ந்த முதலமைச்சராகத் திகழும் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

author img

By

Published : Dec 20, 2021, 6:06 PM IST

விழாவில் பேசிய ஆளுநர். ஆர்.என். ரவி
விழாவில் பேசிய ஆளுநர். ஆர்.என். ரவி

இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும், சக்திவாய்ந்த முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்வதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா, அதன் வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்த மாணவர்களுக்குப் பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 25 நபர்களுக்கு முனைவர் பட்டமும், 104 நபர்களுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் என 129 நபர்களுக்கு விழா மேடையில் ஆர்.என். ரவி வழங்கினார்.

அப்போது பேசிய ஆர்.என். ரவி, “மருத்துவப்படிப்பில் பட்டங்களைப் பெற்றுள்ள உங்களை வாழ்த்துகிறேன். மருத்துவப் படிப்பில் பட்டங்களைப் பெற்றுள்ள நீங்கள் இன்று என்ன சாதித்தீர்களோ, அது உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் சாத்தியமாகி உள்ளது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கல்வி, மருத்துவச் சேவை, ஆராய்ச்சியில் சிறப்பாகச் செயல்படுகிறது. உலகளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கரோனா பாதிப்பு இன்னும் போகவில்லை. தமிழ்நாடு அரசு கரோனா தொற்றை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

கரோனா தொற்று புதுப்புது வகைகளில் வந்துகொண்டே இருக்கிறது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதால், வாழ்க்கை முறையைப் பாதுகாப்பானதாக வைத்துக்கொள்ள முடியும். கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

மருத்துவம் பட்டம் இன்று பெற்றுள்ள நீங்கள் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாளாகும். மருத்துப்பட்டம் பெற்றுள்ள நீங்கள் மருத்துவச் சேவையைச் செய்வதற்குத் தகுதிப்பெற்றுள்ளீர்கள். மருத்துவர்களை மக்கள் கடவுளாகப் பார்க்கின்றனர். காரணம் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்பில் இருக்கின்றீர்கள்.

மருத்துவத் துறை தவிர்க்க முடியாத வகையில் சேவைத் துறையாகும். சந்தை என்றால் அனைத்துக்கும் விலை இருக்கும், மதிப்புமிக்க சேவைத் துறை வணிகமயமாகி விடக்கூடாது. மருத்துவர்கள், நோயாளிகள் சொல்வதை முதலில் கேட்க வேண்டும்.

அந்தக் கலையை மருத்துவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நோயாளிகளைத் திறந்த மனத்துடன் அணுக வேண்டும். மருத்துவர்கள் நாள்தோறும் கற்றுக்கொண்டு, அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி

சமுதாயத்தின் விலைமதிக்க முடியாத சொத்துகளான மருத்துவர்கள், தங்கள் உடல்நலனைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். கடும் அழுத்தம் நிறைந்ததாக மருத்துவர்களின் வாழ்வு இருந்தாலும், அவர்கள் தங்கள் உடல்நலன், மனநலனைச் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள 941 முதல் 950 வரையிலான திருக்குறள்களின்படி வாழ வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுகள் - ஸ்டாலின் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.