லாரியில் கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்

author img

By

Published : Nov 25, 2021, 11:44 AM IST

Updated : Nov 25, 2021, 12:40 PM IST

மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாகப் புதுச்சேரிக்கு லாரி மூலம் கடத்திவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கேன் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

சென்னை: வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வழியாகப் பல்வேறு வழித்தடங்களில் கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் சந்தேகத்துக்கு இடமான பல்வேறு வழித்தடங்களில் கடந்த 10 நாள்களாகத் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 24) காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கன்டெய்னர் லாரியை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

எரிசாராயம் பறிமுதல்

இந்தச் சோதனையில் கன்டெய்னர் லாரி முழுவதும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 21 ஆயிரம் லிட்டர் அடங்கிய 600 கேன் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றைப் பறிமுதல்செய்த மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் கன்டெய்னர் லாரியை ஓட்டிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலேந்திர சிங் (34) என்ற ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியிலிருந்து அந்தக் கன்டெய்னர் லாரியை தான் ஓட்டிவந்ததாகவும், அதைப் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கொண்டுசேர்க்கும்படி தனக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் பாலேந்திர சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த எரிசாராயக் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Last Updated :Nov 25, 2021, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.