ETV Bharat / city

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

author img

By

Published : Feb 17, 2021, 11:09 PM IST

Sasikala challenge admk general body meeting, comes to next month
Sasikala challenge admk general body meeting, comes to next month

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தமாதம் 15ஆம் தேதி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், 'அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தனர். பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனவும் வழக்கு தொடர்ந்திருந்தனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கிக் கணக்குகளை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிவில் வழக்கு என்பதால் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மீண்டும் முறையீடு ஒன்றை மேற்கொண்டார். அதில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தால் அரசியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என்றும் முறையீட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு அடுத்த மார்ச் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியத்துக்கு மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்' - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.