ETV Bharat / city

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி முதல் டெல்லி பயணம்: அமித் ஷாவுடன் சந்திப்பு?

author img

By

Published : Sep 22, 2021, 5:12 PM IST

Updated : Sep 23, 2021, 10:26 AM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (செப்டம்பர் 23) காலை டெல்லி செல்கிறார். அங்கு மரியாதை நிமித்தமாக உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு கடந்த 18ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், துரைமுருகன் உள்ளிட்ட பிற அமைச்சர்களையும், அலுவலர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவி மாநில காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபுவை நேரில் அழைத்துப் பேசினார்.

இந்த நிலையில், ஆர்.என். ரவி இன்று காலை டெல்லி செல்கிறார். அங்கு அவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்லும் ஆர்.என். ரவி, அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.

நீட்டுக்கு விலக்கு கிடைக்குமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலைத் தருவார் என நம்புவதாக மாநில மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏழு பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு அறிவிப்பால் அதிர்ச்சி 😲

Last Updated :Sep 23, 2021, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.