ETV Bharat / city

காணாமல் போன நகையை மீட்ட பெரியமேடு காவலர்கள்!

author img

By

Published : Jan 23, 2022, 5:06 PM IST

police recovered missing jewels at chennai
50 சவரன் நகை

பெரியமேடு அருகே ஆட்டோவில் செல்லும் போது தவறவிட்ட 50 சவரன் நகையை மீட்டு பெரியமேடு காவல் நிலைய காவலர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை: வேப்பேரி பிரதாபட் சாலையில் உள்ள சந்தன்பாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மஹிபால்சந்த் (42). இவர் மும்பையில் இருந்து தங்க நகைகளை மொத்தமாக வாங்கி சென்னையில் உள்ள பல்வேறு நகை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு மஹி பால்சந்த் 365 கிராம் எடையுள்ள 50 சவரன் தங்க நகைகளுடன் திருப்பதி செல்வதற்காக ஆட்டோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றுள்ளார்.

பெரியமேடு ஈவிஆர் சாலை எஸ்ஆல்ஓ அலுவலகம் அருகே ஆட்டோ சென்ற போது மஹிபால் தனது கால்சட்டை பின் பாக்கெட்டில் வைத்திருந்த 50 சவரன் நகை காணாமால் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அதே ஆட்டோவில் ஈவிகே சம்பத் சாலை வரை சென்று தேடி பார்த்து போது நகை கிடைக்கவில்லை.

பின்னர், இது குறித்து மஹிபால்சந்த் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் காணாமல் போன நகைகளின் புகைப்படங்களை நகை வியாபாரிகள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, நேற்று (ஜனவரி 22) புரசைவாக்கம் சண்முகம் தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வெங்கடேசன் என்பவர் நகைகளை விற்பனை செய்ய வந்துள்ளார். அதைப் பார்த்த நகைக்கடை உரிமையாளர் காணாமல் போன நகை போல் இருந்ததால் கீழ்ப்பாக்கம் துணை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவலர்கள் வெங்கடேசனை பிடித்து, நகையுடன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈவிகே சம்பத் சாலையில் வெங்கடேசன் உறவினர் ஜோதி என்பவர் நடந்து செல்லும் போது சாலையில் நகைகள் கிடந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று வெங்கடேசன் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 50 சவரன் தங்க நகைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.