ETV Bharat / city

சென்னையில் தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை

author img

By

Published : Aug 21, 2021, 9:15 PM IST

d
சென்னையில் தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை

சென்னையில் மெட்ரோ ஏரிகளின் நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளது குறித்தும், குடிநீர் விநியோகம் தடையின்றி சென்னைவாசிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுவது குறித்தும் விளக்கமளிக்கும் அலுவலர்கள்.

சென்னை: மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் முக்கிய ஏரியான வீராணம் ஏரியிலிருந்து நீரேற்றம் செய்ய தொடங்கியுள்ள நிலையில், மெட்ரோ ஏரிகளின் நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளது.

குடிநீர் வழங்கல் வாரியத்தின் அலுவலர்கள் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் நீரை எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால், வாரியத்தின் நீரியல் நிபுணர்கள் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனாலும் குடிநீர் விநியோகம் தடையின்றி சென்னைவாசிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்கிறார்கள்.

மெட்ரோ ஏரிகளின் நீர் இருப்பு

இது குறித்து மெட்ரோ வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "வீராணம் ஏரியிலிருந்து தற்போது 65 மில்லியன் லிட்டர் தினந்தோறும் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்த அளவு படிப்படியாக உயர்த்தப்படும். வழக்கமாக வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் தினந்தோறும் எடுக்கப்படும்.

இதுதவிர தற்போது என்.எல்.சி, பரவனாற்றிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 60 மில்லியன் லிட்டரும் எடுக்கப்படுகிறது. இதனால், மொத்தம் 125 மில்லியன் லிட்டர் நீர் தற்போது சென்னைக்கு கிடைக்கிறது. ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீரும் கணிசமான அளவுக்கு வருவதால் அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் முறையான நீர் இருப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஏரிகளின் கொள்ளளவு

இது குறித்து உதவி செயற்பொறியாளர் அருணகிரி கூறுகையில், "வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆயிரத்து 468 மில்லியன் கியூபிக் அடியாகும். இது தற்போது 798 மில்லியன் கியூபிக் அடியை எட்டியுள்ளது. எனவே, சென்னை மெட்ரோ வாரியம் தமக்குரிய நீரை எடுத்துக்கொள்ளலாம் என ஏற்கெனவே தகவல் கொடுத்திருந்தோம்.

அதன்படி மெட்ரோ வாரியம் நீரேற்றம் செய்யத் தொடங்கியுள்ளது. வீராணம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

இன்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 140 அடியாகும். இதில், நீர் இருப்பு 137 அடியை தொட்டுள்ளது. இதேபோல செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 85.40 அடியாக இருக்கும் நிலையில், தற்போது நீரின் கொள்ளளவு 80.91 ஆக உள்ளது.

மேலும், சோழவரம் ஏரியின் மொத்த நீர் இருப்பு 65.50 அடியாகும். தற்போது, இது 60.64 அடியாக உள்ளது. ரெட் ஹில்ஸ் தேக்கத்தின் நீரின் மொத்த அடி 50.20 ஆக உள்ளது.

வெளியேறும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை

முன்னாள் நீரியல் நிபுணர் ஜே. பிரபாகரன்,"கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் ஏரிகளில் நல்ல நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தண்ணீரை எப்படி சேமித்து வைப்பது என்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும்.

நல்ல பருவமழை பெய்தால் ஏரிகளில் நீர் நிரம்பி வரும். அப்போது, தண்ணீர் வெளியேற வாய்ப்புண்டு. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியம் அப்டேட் செய்துள்ள தரவுப்படி சென்ற வருடம் இதே நாளில் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 4ஆயிரத்து 387 மில்லியன் கியூபிக் அடியாக இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 8ஆயிரத்து 429 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. நீர் இருப்பின் அளவு சுமார் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.