ETV Bharat / city

9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு வளர்க்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த சுகாதாரத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Feb 7, 2022, 5:55 PM IST

சுகாதாரத்துறை செயலாளர்
சுகாதாரத்துறை செயலாளர்

தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளரால் சுனாமியின்போது, 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு அரவணைப்புடன் வளர்க்கப்பட்ட சௌமியாவின் திருமண விழாவில், மாவட்ட ஆட்சியர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஆசி வழங்கிக் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 2004ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் 6,065 பேர் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது.

குறிப்பாகப் பேரிடர் பாதிப்பில் தாயையும், தந்தையையும் ஏராளமான குழந்தைகள் இழந்தனர். அப்போது நாகையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில், தாய் மற்றும் தந்தையை இழந்த 99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள்.

திருமணம்

அதில் 9 மாத குழந்தையான சௌமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளம் குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தவரும், தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலராக செயல்பட்டு வருபவருமான ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார்.

சென்னைக்குப் பணி மாறுதலில் சென்றாலும், ராதாகிருஷ்ணன் மாதாமாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு, அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி, அவர்களுடைய வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பைச் செலுத்திப் பராமரித்து வந்தார்.

தொடர்ந்து சௌமியா மற்றும் மீனா ஆகியோர் 18 வயதைக் கடந்த பின்பு, நாகை புதிய கடற்கரைச் சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் அவர்களைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சௌமியா திருமணம் நாகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று(பிப்.06) நடைபெற்றது.

நெகிழ்ச்சியில் ராதாகிருஷ்ணன்

நாகை ஆபிசர்ஸ் கிளப்பில் நடந்த திருமண விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை எஸ்பி ஜவஹர், நாகையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விழாவில் நெகிழ்ச்சியுடன் கலண்டு கொண்ட ராதாகிருஷ்ணன்

விவரம் தெரிந்த பல குழந்தைகள், தாய், தந்தையரை இழந்த நிலையில் மீட்கப்பட்டாலும், சொந்த பந்தம் என எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளான சௌமியா மற்றும் மீனா ஆகியோரை மீட்டெடுத்த ராதாகிருஷ்ணன், அவர்களது திருமண விழாவில் நேரத்தைச் செலவிட்டார்.

பழைய நினைவுகள்

சுனாமி பேரலைப் பாதிப்புகளை ஆய்வு செய்ய ராதாகிருஷ்ணன் சென்றபோது, பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தைதான் சௌமியா எனப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, பேசிய சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன், மனித நேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்று கூறினார்.

குழந்தையாக மீட்கப்பட்ட சிறுமிகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளைச் செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்தகட்டமான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மலர்விழி, மணிவண்ணன் தம்பதி குடும்பத்திற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.