ETV Bharat / city

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் : சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Mar 12, 2022, 10:27 AM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு கடந்த 4ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின் போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இங்கு மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களைப் பறித்துக் கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்
தமிழ்நாடு மாநில தேர்தல்

குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்க வாய்ப்புள்ளதால் போதிய காவல்துறை பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், அது தாக்கல் செய்யப்படாததால், தேர்தல் அதிகாரிக்கு எதிராகத் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (மார்ச்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் அதிகாரி இளவரசன் நேரில் ஆஜரானார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் 26ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறையினர் தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தங்களை சிறையில் அடைத்து விட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகவும் கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தேர்தல் அதிகாரிக்கு அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'கவலைப்பட வேண்டாம், நான் இருக்கிறேன்' - ரசிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.