ETV Bharat / city

பேரவைத் தேர்தல் 2021: மநீம-வுடன் ஆம் ஆத்மி கூட்டணி?

author img

By

Published : Jan 30, 2021, 7:18 PM IST

மநீம-வுடன் ஆம் ஆத்மி கூட்டணி
மநீம-வுடன் ஆம் ஆத்மி கூட்டணி

சென்னை: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரும் 21ஆம் தேதி நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இது குறித்து அந்த விழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன், "தேர்தல் கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது, கூட்டணி உறுதியாகும் என நம்பப்படுகிறது.

இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. நாளை சென்னையில் நடைபெறும் ஆம் ஆத்மி செயல்வீரர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. கமல்ஹாசன் பலகட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இதற்கிடையில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது.

ஆம் ஆத்மி கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இருகட்சிகளும் ஊழலற்ற ஆட்சி, நிர்வாகம் என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.

மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று அணி அமைய வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.