ETV Bharat / city

'அதிமுக அலுவலகத்தை தாக்கியது அவர்கள்தான்' - ஓபிஎஸ் ஆதரவாளரின் புதிய புகார்!

author img

By

Published : Jul 26, 2022, 7:35 AM IST

Chennai Royapettai Riot on AIADMK Office
Chennai Royapettai Riot on AIADMK Office

அதிமுக தலைமை அலுவலக தகர்க்க குண்டர்களை ஏவியதாக எடப்பாடி பழனிச்சாமி, சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: கடந்த 11ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிமுக தலைமை அலுவலகம் கைப்பற்றுவது தொடர்பாக மோதல் நடைபெற்றது. இந்த கலவரத்தில் காவலர்கள் மற்றும் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 14 நபர்கள் கைது செய்யப்பட்டு 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திருடிச் சென்றுவிட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

'ரெக்கார்ட் டான்ஸ் ஆடி அவமரியாதை': ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர், ஈபிஎஸ் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மீது புகார் ஒன்றை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 25) அளித்தார். அந்த புகாரில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ரெக்கார்ட் டான்ஸ் ஆடி மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும், அதுகுறித்து மேலாளர் மகாலிங்கத்திடம் கேட்டதற்கு மரியாதை குறைவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடந்த 11ஆம் தேதி ஓபிஎஸ், புகழேந்தி உட்பட பலர் வழக்கமாக கட்சிப் பணியாற்றிட தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களுடன் சென்றபோது ஈபிஎஸ் தூண்டுதலின் பேரில் தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என். ரவி, எம்.கே. அசோக், ஆதி ராஜாராம் ஆகியோர் குண்டர்களுடன் கத்தி, கற்கள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தலைமை அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் தங்களை சரமாரியாக தாக்கினர்.

'ஆவணத்தை பாதுகாத்த ஓபிஎஸ் கோஷ்டி': இதில், ரவுடிகள் சிலர் தலைமை கழகத்தின் உள்கதவை பூட்டியதால் தொண்டர்கள் கதவை திறந்து, ஓ.பன்னீர் செல்வத்தை அறைக்குள் பத்திரமாக கூட்டி சென்றனர். அப்போது இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை தூக்கி வீசி, வாகனங்களை தாக்கினர். இதனால் தொண்டர்கள் சிலர் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

மேலும், தலைமை அலுவலகத்தில் இருந்த விலையுயர்ந்த பொருள்களை மேலாளர் மகாலிங்கம் மற்றும் துணை மேலாளர் மனோகரன் ஆகியோர் திருடி சென்றுவிட்டனர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே முக்கிய ஆவணங்கள் மற்றும் இருப்பு தொகையை தலைமை அலுவலகத்திற்குள் வைப்பதில்லை. அவை ஒருங்கிணைப்பாளர் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் வங்கி கணக்கில் இருப்பதுதான் வழக்கம்.

ஓபிஎஸ் மற்றும் நாங்கள் இணைந்து தலைமை அலுவலக சொத்துக்களை திருடிவிட்டதாக சி.வி. சண்முகம் புகார் அளித்திருப்பது முற்றிலும் தவறு. குண்டர்களை ஏவி தலைமை அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்த தூண்டிய எடப்பாடி பழனிச்சாமி, பொய் புகார் அளித்த சி.வி. சண்முகம், கொலைவெறி தாக்குதல் நடத்திய வி.என். ரவி, ஆதி ராஜாராம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 70 பேரின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.