ETV Bharat / city

'அக். 2 கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்!'

author img

By

Published : Sep 23, 2021, 2:05 PM IST

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தொண்டர்களுக்கு விடுத்த சுற்றறிக்கையில், "கிராம சபைகளைப் பொறுத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ என்னும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது என்னும் பெருமை நமக்கு உண்டு.

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது.

மநீமவுக்கு இது முதல்...!

தேர்தல் பரப்புரை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும். 2020 ஜனவரி 26ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம்.

பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், ‘கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது’ என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழ்நாடு அரசு, வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.

சுமார் 615 நாள்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல்.

குரல்கள் வலுவாக ஒலிக்கட்டும்!

நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும். இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை.

தொய்வின்றி தொடருவோம்!

கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைப் பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை காணொலி பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு.

அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள். கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'மனசாட்சியின்றிச் செயல்படும் ஊடகங்கள்; அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட அச்சம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.