ETV Bharat / city

'நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக!'

author img

By

Published : Jun 8, 2021, 11:14 PM IST

L.MURUGAN - NEET
L.MURUGAN - NEET

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்றுகிறது என எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ஆம் ஆண்டுதான் அதுவும் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோதுதான், நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது.

காங்கிரஸ் - திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2013 ஜூலை 18ஆம் தேதி மேல்முறையீடு செய்தது இதே திமுக காங்கிரஸ் கூட்டணிதான். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

2017ஆம் ஆண்டுமுதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை கொண்டுவந்த திமுகவும், காங்கிரசும் எதிர்க்கட்சியாக அதைக் கடுமையாக எதிர்த்தன. திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என வாக்குறுதிகளை அளித்தார்.

இந்நிலையில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த திமுகவினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், தலைமையில் உயர்நிலைக் குழுவை மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். நீட் தேர்வு சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து திமுக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.

2010ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் சுமார் ஆறு ஆண்டுகள் உச்ச நீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் எனத் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் முந்தைய அதிமுக அரசும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு காரணமாகக் கிராமப்புற ஏழை எளிய மக்கள், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முந்தைய அரசு துணைபுரிந்துள்ளது.

இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். இதனைத் தடுப்பதற்கு திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் முயல்கின்றனர். இதுதான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் மீது காட்டும் பரிவா?

இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வைப் பற்றி எந்தப் புதிய விஷயத்தையும் கூற முடியாது.

முழுக்க முழுக்க காலத்தை கடத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட ஒரு ஆணையமாக ஏ.கே. ராஜன் ஆணையம் செயல்படப் போகிறது. எனவேதான் மு.க. ஸ்டாலின் இந்த ஆணையத்தை நீட் தேர்வு ரத்து குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறாமல், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறியிருக்கிறார். வீம்புக்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல், நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தேவையின்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை கலைத்துவிட்டு மாணவர்கள் தேர்விற்குத் தயார்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை பாஜக வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.